வாழ்வியல்

ஸ்திரி வேஷத்தில் வெளிப்பட்ட திலீப்பின் கிருஷ்ண பிரேமை!

யுகன்

‘நகரேஷு காஞ்சி; புருஷேஸு விஷ்ணு’ என்பார்கள் பெரியவர்கள். இதற்கு அர்த்தம் - நகரங்களிலேயே சிறந்தது, தலையாயது காஞ்சி மாநகரம். யுக புருஷன் என்பவன் ஒருவனே, அவனே விஷ்ணு.

பரமாத்மா. அவனை அடையும் அனைத்து உயிர்களும் ஜீவாத்மா. இந்தத் தத்துவத்தை குச்சிபுடி நாட்டியத்தின் மூலம் நேற்று முன் தினம் கோவை, ஸ்ரீ சங்கர கிருபா அரங்கத்தில் நிகழ்த்தினார் இளம் குச்சிப்புடி நடனக் கலைஞரான திலீப்.

குச்சிப்புடி நடன மேதை டாக்டர் வேம்பட்டி சின்ன சத்யம், புகழ் பெற்ற பல மேதைகளின் பாடல்களுக்கான நடன முறைகளை வகுத்தளித்திருக்கிறார். அந்தப் பாணியிலிருந்து சற்றும் வழுவாமல் அந்தப் பாடல்களுக்கு தன் அழகூட்டும் அபிநயங்களை வெளிப்படுத்தி நேர்த்தியான நடனத்தை வழங்கினார் திலீப்.

புராணங்களில் கிருஷ்ணனின் மீதான காதலை, அன்பை வெளிப்படுத்திய நாயகிகளின் நிலையிலிருந்து இந்த நாட்டிய நிகழ்ச்சிக்கானக் கருவை எடுத்துக்கொண்ட திலீப், அதை வெளிப்படுத்த பெண் வேடமிட்டே (ஸ்திரி வேஷம்) முழு நிகழ்ச்சியிலும் ஆடியது, சுவாரசியமாக்கியது. ஆண் மைய நாட்டிய முறைக்குத் தாண்டவம் என்றும் பெண் மைய நாட்டிய முறையை, லாஸ்யம் என்றும் அழைப்பர்.

திலீப்பின் இந்த நிகழ்ச்சியில் அவரிடமிருந்து வெளிப்பட்ட லாஸ்ய நாட்டிய முத்திரைகள், பக்தியையும் காதலையும் சங்கமிக்க வைத்தன.

ஜெயதேவரின் அஷ்டபதி, ஷேத்ராயரின் பதங்கள், சித்தேந்திர யோகியின் பாமாகலாபம் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களுக்குத் தன்னுடைய மெய்மறக்கச் செய்யும் நடனத்தால் பக்தியை காணிக்கையாக்கினார் திலீப்.

SCROLL FOR NEXT