சிவகங்கை: சிவகங்கை அருகே குலதெய்வ வழிபாட்டுக்காக 125 கிடாக்களுடன் கிராம மக்கள் 10 கி.மீ. நடந்து சென்றனர்.
சிவகங்கை அருகேயுள்ள பெருமாள்பட்டி, இலுப்பக்குடி கிராமங் களைச் சேர்ந்த 65 பங்காளிகள், நரியனேந்தலில் உள்ள முத்தையா கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குலதெய்வ வழிபாடு நடத்துகின்றனர். கரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் 5 ஆண்டுகளுக்கு பின்னர், நேற்று சாமி கும்பிடச் சென்றனர். அவர்கள் 125 கிடாக்களுடன் 10 கி.மீ. தூரத்தில் உள்ள கோயிலுக்கு நடந்து சென்றனர்.
அவர் களுக்கு பின்புறம் வழிபாட்டுக்கான பொருட்கள் ஏற்றப்பட்ட 65 சரக்கு வாகனங்கள் அணிவகுத்து சென்றன. நேற்றிரவு கோயிலை அடைந்த அவர்கள், இன்று (ஜூன் 9) காலை கோழிகளை பலியிட்டு வழிபாட்டை தொடங்குகின்றனர். ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் கிடா வெட்டி படையலிடுகின்றனர். பின்னர் 11-ம் தேதி மாலை வாகனங்களில் ஊருக்கு திரும்புகின்றனர்.
இது குறித்து ராமசாமி கூறியதாவது: கடந்த காலங்களில் பொருட்களை ஏற்றி வர மாட்டு வண்டிகளை பயன்படுத்தினோம். தற்போது சரக்கு வாகனங்களை பயன்படுத்துகிறோம். கரோனாவால் 5 ஆண்டுகளுக்கு பின்னர் சாமி கும்பிடுகிறோம். 3 நாட்கள் அங்கேயே தங்கியிருந்து வழிபாட்டை முடித்த பின்பு ஊர் திரும்புவோம் என்று கூறினார்.