‘தடக்... தடக்...’ என்ற ரயில்களின் சத்தத்தை கேட்காத சென்னைவாசிகள் எவரும் இருந்திருக்க முடியாது. ரயில் நிலையமும், ரயில் வண்டிகளும் சென்னை மக்களின் வாழ்க்கையின் யதார்த்ததோடு எப்போதும் கலந்திருக்கின்றன. காலை ஆரம்பித்து இரவு வரை அம்மக்களின் வாழ்க்கை பயணத்தில் இந்த ரயில்களுக்கு எப்போதும் இடமுண்டு.
சென்னையின் முதல் புறநகர் ரயில் பயன்பாடு தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை ஏப்ரல் 2, 1931 ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. அன்றிலிருந்து சுமார் 92 ஆண்டுகள் பலருடைய வாழ்க்கையின் பாதையில் ஓர் அங்கமாய் இந்தப் புறநகர் ரயில் பயணங்கள் அமைந்துவிட்டன. இந்த ரயில்களை நம்பியே பலரும் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். எப்போதும் பரப்பரப்பாக இயங்கி கொண்டிருக்கும் ரயில் நிலையங்களை பொறுமையாக அவதானிக்கும் பழக்கம் எனக்கு எப்போதும் உண்டு.
அப்படி ஒரு நாளாக அது அமைந்தது. மதியம் 2:30 மணி அளவில் சென்னை எழும்பூர் நிலையம் முன்வாசலில் சிவப்புத் துணி அணிந்து சோர்ந்து அமர்ந்திருந்த கூலி தொழிலாளியை பார்த்தேன். ‘பயணிகள் யாராவது வருவார்களா?’ என்று ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். பயணிகள் யாரும் வராததால் அவருடன் உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் தன் சுய அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை. ஆனால், உரையாடலைத் தொடங்கினார்.
“ரயில் நிலையங்களில் லக்கேஜ்களை தூக்கும் இந்தக் கூலி தொழிலை கடந்த 14 வருடமாக செய்து வருகிறேன். இப்போது எனக்கு வயது 63. முன்புபோல் என் தொழில் இல்லை.. மாறிவிட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் எங்களை பார்ப்பார்கள். சிலர் வேலைக்கேற்ற ஊதியம் தருவார்கள். சிலர் குறைவாகத் தருவார்கள். பல நேரங்களில் அவமானங்களையும் கடந்து வந்திருக்கிறேன். அதனால் என் பிள்ளைகள் படித்து பெரிய இடத்தில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
எனது மகன் கப்பல் சம்பந்தபட்ட படிப்பை படிக்க விரும்பினான். அவனுக்காக பல இடங்களில் கடன் வாங்கி மெரைன் இன்ஜினியரிங் படிக்க வைத்தேன். என் மகன் படித்து முடித்து எங்கள் குடும்ப நிலை மாறும் என்ற கனவில் என் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தேன். ஆனால், நான் நினைத்ததுக்கு மாறான சம்பவம் அடுத்தடுத்து அரங்கேறியது.
எதிர்பாராமல் பட்டாசு விபத்து ஒன்றில் என் மகனின் கண் பார்வையில் குறை ஏற்பட்டது. மெல்ல மெல்ல அவனது கண் பார்வை இழந்து வந்தது. அப்போது என் நம்பிக்கை முழுவதுமாக தகர்ந்தது. இத்துடன் என் போராட்டம் நிற்கவில்லை. பெண் பிள்ளைகள் படிக்க கூடாது என்று நினைக்கும் தந்தை நான் இல்லை. என் மகனுக்கு இணையாக என் மகளையும் படிக்க வைத்தேன். கடைசி காலத்தில் எனக்கு ஓய்வு கொடுப்பாள் என்று எண்ணினேன். ஆனால், இந்தத் துயரக் காலத்தில் என் மகளும் எனக்கு உதவ வில்லை. அண்ணன் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும்போது நான் மட்டும் ஏன் வேலைக்கு செல்ல வேண்டும் என்று அவளும் பணிக்கு செல்லவில்லை.
தற்போது, குடும்பத்தின் மொத்த பொருளாதாரமும் 63 வயதான என்னையே சார்ந்திருக்கிறது. எனினும், இவை எல்லாம் மாறும் என்ற நம்பிக்கை ஆழ்மனதில் பதிந்திருக்கிறது. இந்த நம்பிக்கையில்தான் நாட்களை நகர்த்தி கொண்டிருக்கிறேன்” என்றார்.
இந்த உலகில் நாம் அனைவரும் எதோ ஒன்றுக்காக ஓடிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவர் வாழ்வில் பல கதைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நான் சந்தித்த கூலித் தொழிலாளியும் அத்தகைய கதைகளில் ஒன்றைதான் என்னுடன் பகிர்ந்துகொண்டார். ஆனால், அவரது கதையில் வாழ்வின் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்தும் நம்பிக்கை பாடம் நிரம்பி இருந்தது!