தமிழகத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய பழமாக மாம்பழம் விளங்குகிறது. ஆனால், உணவு பாதுகாப்பு உரிமமின்றி இருப்பு வைத்து, எத்திலீனை தவறாக பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் சந்தைக்கு வருகின்றன. ஆர்வத்தில் அவற்றை வாங்கி உண்ணும்போது உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் எத்திலீனை தவறாக பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். ஆறுமுகநேரி பகுதியில் உள்ள மாம்பழ குடோன்களில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தால் அனுமதிக்கப்படாத முறையில் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 1,125 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. குடோன்கள் மூடி முத்திரையிடப்பட்டன.
உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் உணவு பொருட்கள் தயாரித்தல், இருப்பு வைத்தல், போக்குவரத்து செய்தல் மற்றும் விற்பனை ஆகியவை தண்டனைக்குரிய குற்றம். உணவு பாதுகாப்பு உரிமமின்றி உணவுத் தொழில் புரிந்தால், உடனடியாக அவ்வளாகம் மூடி முத்திரையிடப்படும். உணவு பாதுகாப்பு உரிமம் பெற https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித் தனர்.
தரத்தை சோதிப்பது எப்படி? - நமக்கு நன்கு அறிமுகமான வியாபாரிகளிடம் மட்டுமே மாம்பழம் வாங்க வேண்டும். மாம்பழத்தை வாங்கி வந்தவுடன், ஓடும் தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். முடியும் எனில், ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைத்தால், தோல் மேல் இருக்க கூடிய எத்திலீன் படிமம் நீங்கி விடும். இயன்றவரை மாம்பழத்தின் மீது கருப்பு திட்டுகள் இல்லாத பழமாக பார்த்து வாங்க வேண்டும். மாம்பழத்தை மிருதுவாக அழுத்தினால், சற்று இறுக்கமாக இருக்க வேண்டும். நன்கு அழுந்தினால், அவற்றை வாங்க வேண்டாம். ஒரே மாதிரியாக மஞ்சள் நிறத்தில் இல்லாமல், சிறிது பச்சை நிறமும் இருக்குமாறு மாம்பழத்தை பார்த்து வாங்க வேண்டும்.
பழுக்க வைக்கும் முறைகள்: மாம்பழம் உள்ளிட்ட பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்க விரும்புபவர்கள், எத்திலீன் கியாஸ் சேம்பர் மூலமாகத் தான் பழுக்க வைக்க வேண்டும். எத்திலீன் கியாஸ் சேம்பர் இல்லாத இடங்களில், எத்திலீன் ஸ்பிரே பயன்படுத்தலாம். ஆனால், பழங்கள் வைக்கப்படும் அறையில் முதலில் எத்திலீன் ஸ்பிரே செய்து, அதன் பின்னர் மாம்பழத்தை சுவற்றிலிருந்து அரை அடி தள்ளியும், அறையின் கொள்ளளவில் 75 சதவீதம் வரை மட்டும் வைத்தும், அறையை மூடிவிட வேண்டும். அடுத்த 24 மணி நேரம் கழித்து, கதவினைத் திறக்க வேண்டும்.
இந்த வசதியும் இல்லாத வியாபாரிகள் 'எத்திஃபான்' என்று சொல்லக்கூடிய பாக்கெட்டில் வரக்கூடிய செயற்கை பழுக்க வைப்பானை (எத்திலீன் பொடி) 5-10 விநாடிகள் தண்ணீரில் ஊறவைத்து, சிறு துளைகள் உள்ள பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, 10 கிலோ மாம்பழம் உள்ள பெட்டியில் வைத்து, அப்பெட்டியை காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும். அதனை, 24 மணி நேரம் கழித்து திறக்கலாம்.
இதைத்தவிர எத்திலீனை நேரடியாக பழங்களில் தெளிப்பது, எத்திலீன் கலந்த தண்ணீரை பழங்களுடன் சேர்த்து இருப்பு வைப்பது ஆகிய முறைகள் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணய ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு புறம்பானது.
மோசடி குறித்து புகார் அளிக்கலாம்: மாம்பழத்தை வாங்கி வந்த இரண்டு தினங்களுக்குள் அறை வெப்பநிலையில் வைத்திருந்து, அதனை பயன்படுத்தலாம். மாம்பழம் உள்ளிட்ட உணவு பொருட்களின் தரங்கள் குறைபாடு மற்றும் கடையின் சேவை குறைபாடு குறித்து, நுகர்வோர் புகாரளிக்க விரும்பினால் 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்பு துறையின் எண்ணுக்கோ அல்லது உணவு பாதுகாப்பு துறையின் புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும் என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.