நிழற்படங்கள் வெறும் படங்கள் மட்டுமல்ல, அது வாழ்வின் நீங்கள் நினைவுகளை தன்னகத்தே தாங்கி நிற்கும் பெட்டகம். இன்றைய உலகில் இல்லற வாழ்வில் இணைய விரும்பும் இணையர்கள், அதற்கு முன்னதாக ப்ரீ-வெட்டிங் போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம். இது தனி ஒரு வணிகமாகவே தற்போது உருவாகி உள்ளது. அந்த அளவுக்கு இதற்கான டிமாண்ட் உள்ளது.
அதிலும் ப்ரீ-வெட்டிங் போட்டோ ஷூட்டுக்காக இந்த இணையர்கள், புகைப்படக் கலைஞருடன் இணைந்து நிறைய மெனக்கெடுவார்கள். இதெல்லாம் அழகான நினைவுகளுக்காக தான். இதற்கென பிரத்யேக ப்ராப்பர்ட்டி கூட பயன்படுத்துவது உண்டு. இந்தச் சூழலில் வித்தியாசமான முயற்சியாக படமெடுத்து ஆடும் நாகப் பாம்புடன் ப்ரீ-வெட்டிங் போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர் இளம் இணையர்கள். அது தற்போது இணையவெளியில் கவனம் பெற்றுள்ளது.
ட்விட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள ட்வீட் பதிவுகளில் அந்தப் படங்களை கொண்டு ஒரு குட்டிக் காதல் கதையே சொல்லப்பட்டுள்ளது. பச்சை நிறத்தில் தோட்டம் சூழ்ந்த வீடு ஒன்றில் ஒரு பெண் நடந்து வருகிறார். அப்போது ஒரு நாகப் பாம்பினை அவர் பார்க்கிறார். உடனடியாக அதைப் பிடிக்க வேண்டி போன் செய்கிறார். தொடர்ந்து இரண்டு பேர் ஒரு ஸ்கூட்டியில் வருகிறார்கள். அதில் ஒருவர் பாம்பை பிடிக்கிறார். அந்தப் பெண்ணுக்கும், பாம்பை பிடித்தவருக்கும் பார்த்தவுடன் காதல் ஏற்படுகிறது. பாம்பைப் பிடித்த பிறகு திரும்பச் செல்லும்போது போன் செய்யும்படி சிக்னல் கொடுக்கிறார். இருவரும் போனில் பேசுகிறார்கள். காதல் செய்கிறார்கள். இறுதியில் அவர்கள் இருவரும் இணைந்து நிற்க, அவர்களுக்குப் பின் பக்கம் பாம்பு படமெடுத்து நிற்கிறது. இப்படியாக அந்த போட்டோக்கள் மூலம் கதை சொல்லப்பட்டுள்ளது.
இந்தப் படங்களை பார்க்கும்போது ‘பாம்புக்கு பல் பிடுங்கப்பட்டதா என்ன?’ என கேட்க வைக்கிறது.