யும்னம் கெம்சந்த் சிங்

 
இந்தியா

மணிப்பூரின் புதிய முதல்வராக யும்னம் கெம்சந்த் சிங் தேர்வு - யார் இவர்?

வேட்டையன்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதல்வராக யும்னம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் அவர் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் குக்கி பிரிவை சேர்ந்த பெண் எம்எல்ஏ நெம்ச்சா கிப்கென், துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மெய்த்தி - குக்கி எனும் இரு பிரிவு மக்களிடையே மே 2023-இல் வெடித்த மோதல் காரணமாக மாநிலத்தில் அமைதியற்ற நிலை நீடித்தது. மணிப்பூர் முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த பிரேன் சிங் தலைமையிலான அரசு, இந்த மோதல்களை கையாண்ட விதம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக முதல்வர் பதவியை பிரேன் சிங் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

          

இந்த சூழலில் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக 62 வயதான யும்னம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார். அவரது பெயரை முன்னாள் முதல்வர் பிரேன் சிங் முன்மொழிந்துள்ளார். இந்த கூட்டத்தில் மெய்த்தி, குக்கி மற்றும் நாகா பிரிவை சேர்ந்த எம்எல்ஏ-க்கள் பங்கேற்றுள்ளனர்.

புதன்கிழமை அன்று மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்து ஆட்சி அமைக்க யும்னம் கெம்சந்த் சிங் உரிமை கோர உள்ளதாக பாஜக மத்திய பார்வையாளர் தருண் சிங் கூறியுள்ளார்.

யார் இந்த யும்னம் கெம்சந்த் சிங்? - மணிப்பூர் மாநில சட்டப்பேரவை உறுப்பினராக 2017 மற்றும் 2022-ல் தேர்வானவர் யும்னம் கெம்சந்த் சிங். அம்மாநில சபாநாயகராக 2017 முதல் ஐந்து ஆண்டு காலம் பணியாற்றியவர். 2022-ல் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்ததும் முன்னாள் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இடம்பெற்றார். கல்வி, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், வீட்டுவசதி மேம்பாடு உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக பணியாற்றியவர். குடியரசுத் தலைவர் ஆட்சி கடந்த ஆண்டு அந்த மாநிலத்தில் அமலுக்கு வரும் வரை அமைச்சர் பொறுப்பில் அவர் இருந்தார். இந்த சூழலில் தற்போது மணிப்பூர் மாநில புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT