புதுடெல்லி: தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தி, வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
யுவ சங்கம் எனும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலிருந்து 50 மாணவர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதேபோல், டெல்லியிலிருந்தும் தமிழ்நாட்டுக்கு 50 மாணவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த திட்டத்தின் ஏழாம் கட்டமாக தமிழ்நாட்டிலிருந்து மாணவர்கள் குழு டெல்லி வந்துள்ளது. அவர்களை குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து உரையாடினார்.
குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இளைஞர்களுடன் கலந்துரையாடுவது எப்போதும் மகிழ்ச்சியளிக்கும் ஒன்று. அதிலும் எனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள இளம் தலைமுறையினரைச் சந்திப்பது கூடுதல் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் அளிக்கிறது.
எனது தமிழ்நாட்டுப் பயணத்தின்போது ஊடகங்களிடம் பேசியபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பு உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தேன். இதுவே பாரதத்தின் ஜனநாயக வலிமையையும், நாட்டில் அனைவருக்கும் கிடைக்கும் சமமான வாய்ப்புகளையும் எடுத்துக்காட்டுகிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பெருந்தலைவர் காமராஜர், இமானுவேல் சேகரன், திருப்பூர் குமரன், வ.உ. சிதம்பரம் பிள்ளை போன்ற தொலைநோக்குப் பார்வையும் வலுவான தேசிய உணர்வும் கொண்ட தலைவர்களின் சிந்தனைகளையும், நாட்டுப் பற்றையும் இன்றைய இளைஞர்கள் தங்களின் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தி, வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரைப் போன்ற மாபெரும் தேசியக் கவிஞரைக்கூட அவரது சாதிப் பின்னணியைக் காரணம் காட்டி சிலர் உரிய முறையில் போற்றுவதில்லை. மாமனிதர்களின் பங்களிப்புகளை சாதி போன்ற குறுகிய அடையாளங்களின் அடிப்படையில் மதிப்பிடும் மனப்பான்மை சமூகத்தின் முன்னேற்றத்துக்கு உதவாது. நாட்டுக்கும் மனிதகுலத்துக்கும் அவர்கள் ஆற்றிய தொண்டின் அடிப்படையிலேயே அவர்களின் பெருமையைப் போற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய கல்வி அமைச்சகத்தால் ‘ஒரே பாரதம் உன்ன பாரதம்’ திட்டத்தின் கீழ் யுவசங்கம் ஏழாம் கட்டப் பரிமாற்றத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, அக்டோபர் 26 முதல் நவ.1, 2026 வரை, டெல்லி பல்கலைக்கழகம் திருவாரூரிலிலுள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலையுடன் இணைந்து தமிழக மாணவர் குழுவினரை வரவேற்று உபசரிக்கிறது.
இந்நிகழ்ச்சியில் டெல்லி பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் யோகேஷ் சிங், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் உறுப்பினர் செயலர் பேராசிரியர் ஷியாமாராத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, தமிழ்நாட்டின் மாணவர்கள் டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை சந்தித்தனர்.