போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம், கோபால்கஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட தீலிதிகட்டா பகுதியைச் சேர்ந்தவர் சவுரப் அகிர்வார். டாக்ஸி ஓட்டுநரான இவர், கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு சமூக வலைதளத்தில் ‘ரீல்ஸ்’ வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்குத் தகவல் கிடைக்கவே, சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருப்பதாகக் கூறி சவுரப் அகிர்வாரின் வீட்டிற்குச் சென்று அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் துப்பாக்கியைத் தீவிரமாகத் தேடிய அதிகாரிகளுக்கு முதற்கட்டமாக எதுவும் கிடைக்கவில்லை. எனினும், அங்கிருந்த பூட்டிய பீரோ ஒன்றைப் பரிசோதிக்க முயன்றபோது, சவுரபின் குடும்பத்தினர் சாவியைக் கொடுக்காமல் தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து,
சாட்சிகள் முன்னிலையில் பூட்டை உடைத்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். பீரோவுக்குள் சாக்கு மூட்டைகளிலும் பெரிய பைகளிலும் கட்டுகட்டாக அடுக்கப்பட்டிருந்த ரூ. 500, ரூ. 200 நோட்டுகள் நிரம்பி வழியக் காணப்பட்டன. சோதனையின் முடிவில், பீரோவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்தப் பணத்தின் மதிப்பு சுமார் ரூ. 3 கோடிக்கும் அதிகம் என்பது தெரியவந்தது.
இவ்வளவு பெருந்தொகை எதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டது, இதன் பின்னணியில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் உள்ளதா என்பது குறித்துக் காவல்துறையினரும் வருமான வரித்துறையினரும் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.