இந்தியா

கர்நாடக தலைமைச் செயலகம் குறித்து ஏஐ வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது

இரா.வினோத்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள கர்நாடக அரசின் தலைமைச் செயலகத்தைத் துப்பாக்கியால் சுட்டுத் தகர்ப்பது போன்ற ஏஐ வீடியோ ரீல்ஸை வெளியிட்ட பிஹார் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஹஸ்ரத் அலி (25) பெங்களூருவில் கட்டடத் தொழிலாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 20-ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கர்நாடக அரசின் தலைமைச் செயலகமான விதான சவுதாவைத் துப்பாக்கியால் சுட்டுத் தகர்ப்பது போன்ற ரீல்ஸை அவர் வெளியிட்டார்.

ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட இந்த வீடியோவுக்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது குறித்து பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் அபினவ் போலீஸில் புகார் அளித்தார்.

இதையடுத்து, ஹஸ்ரத் அலி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை நேற்று கைது செய்தனர். சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கியதுடன், ஹஸ்ரத் அலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் முடக்கினர்.

இந்நிலையில், பெங்களூரு போலீஸார், “பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவது போலவும், அரசின் பெருமைக்குரிய சின்னங்களை அவமதிப்பது போலவும் ஏஐ மூலம் ரீல்ஸ், புகைப்படங்களை உருவாக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் சட்டப்படி குற்றம்” என எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT