பெங்களூரு: பெங்களூரு ரயில் நிலையத்தில் புகாரை ஏற்க மறுத்த கர்ப்பிணி காவலரை இரும்பு கம்பியால் தாக்கிய சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னையை சேர்ந்த கஜேந்திரா (28) நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு பெங்களூருவில் உள்ள கெம்பே கவுடா (மெஜஸ்டிக்) ரயில் நிலையத்துக்கு சென்றார். அங்கு அவரது செல்போன் காணாமல் போனதால் அதுகுறித்து புகார் அளிப்பதற்காக ரயில்வே காவல் நிலையத்துக்கு சென்றார்.
அப்போது பணியில் இருந்த பெண் காவலர் ஷில்பாவிடம் செல்போன் காணாமல் போனதாக கூறினார். அதற்கு அவர், காவல் நிலையத்தில் தற்போது தான் மட்டுமே பணியில் இருப்பதாக், காலை 10 மணிக்கு வருமாறு கூறியுள்ளார். இதனால் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கஜேந்திரா, அங்கிருந்து கோபமாக வெளியே சென்றார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து காவல் நிலையத்துக்கு வந்த கஜேந்திரா, இரும்பு கம்பியால் ஷில்பாவை 8 முறை தாக்கினார். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இது குறித்து தகவலறிந்து வந்த ரோந்து போலீஸார், ஷில்பாவை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் கஜேந்திரா மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவரை பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீஸார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொலை செய்யும் நோக்கத்தோடு ஷில்பாவை தாக்கி இருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஷில்பாவின் சகோதரர் கிருஷ்ண நாயக் கூறுகையில்,''எனது தங்கை ஷில்பா 2 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவர் தனக்கு பகல் நேர ஒதுக்குமாறு உயர் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தார். அதனை செய்யாததால் அவர் இரவு நேர பணிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது அவருக்கு ஏற்பட்ட காயத்துக்கு இந்த காவல் நிலையத்தின் ஆய்வாளர், வட்ட ஆய்வாளர் ஆகியோரே பொறுப்பு. அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இந்தச் சம்பவம் நடைபெறாமல் இருந்திருக்கும். இப்போது ஷில்பாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, 23 தையல் போடப்பட்டுள்ளது” என்று கூறினார்.