இந்தியா

“வெளிநாட்டு உதவியால்தான் நீங்கள் பிரதமர் ஆனீர்கள்” - மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி

மோகன் கணபதி

புதுடெல்லி: ‘வெளிநாட்டு உதவியால்தான் நீங்கள் பிரதமர் ஆனீர்கள். வெளிநாட்டு உதவியால்தான் இப்போது நீங்கள் பிரதமராக நீடிக்கிறீர்கள்’ என்று நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘பிரதமர் மோடி அவர்களே, நாட்டு மக்களிடம் பொய் சொல்வதை நிறுத்துங்கள். வெளிநாட்டு உதவியால்தான் நீங்கள் பிரதமர் ஆனீர்கள். இப்போதும் வெளிநாட்டு உதவியால்தான் பிரதமராக நீடிக்கிறீர்கள்.

உங்கள் நிதி அமைப்பு முழுமையாக வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டிலும் ஆதரவிலும்தான் உள்ளது. வெளிநாட்டு சமூக ஊடகங்கள் உங்களுக்கு முழுமையாக ஆதரவளிக்கின்றன.

இது குறித்து என்னுடன் வெளிப்படையான விவாதத்துக்கு வாருங்கள் என்று நான் உங்களுக்கு சவால் விடுக்கிறேன். எந்த மேடையிலும், எந்த நேரத்திலும் விவாதிக்க நான் தயார். துணிச்சல் இருந்தால் வாருங்கள்.

ஆனால், நீங்கள் ஒருபோதும் வர மாட்டீர்கள். ஏனென்றால், உங்களைப் பற்றி எனக்குத் தெரிந்த விஷயங்களால் நீங்கள் அச்சப்படுகிறீர்கள்’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள ஒற்றுமைச் சிலை அருகே நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், “சில சக்திகள் நாட்டைப் பிரிக்கத் தொடர்ந்து சதி செய்து வருகின்றன.

பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்த விரக்தியும் ஏமாற்றமும் இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது. வெளிநாடுகளில் யார் யாருடன் ரகசியமாகச் சந்திப்புகளை நடத்துகிறார்கள்? இந்திய எதிர்ப்பு சக்திகள் யாருக்கு ஆதரவளிக்கின்றன? இந்திய எதிரிகளின் மொழியில் யார் பேசுகிறார்கள்? இத்தகைய போக்குகளை நாம் அடையாளம் கண்டு, ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, சமூக ஊடகங்கள் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதையும், வதந்திகள் பரப்பப்படுவதையும், இந்தியாவின் பிம்பத்தைக் கெடுக்க முயற்சிப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய சவால்களை எதிர்கொள்ள நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT