மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர்.
கொல்கத்தா: கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் 30 ஆயிரம் பேருடன் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ‘‘நம் வாழ்வின் அங்கமாக யோகா மாற வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என ஐ.நா.சபைக்கு கோரிக்கை வைத்தார். இதை ஐ.நா. சபை ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, 2015-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி முதலாவது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 12-வது ஆண்டு சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பல்வேறு நகரங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மாநகரில் உள்ள சிவப்பு சாலையில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற 30 ஆயிரம் பேர், பிரதமர் மோடியுடன் இணைந்து யோகா பயிற்சிகளை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில், மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் சுவேந்து அதிகாரி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்த நாளில் ஒட்டுமொத்த தேசமும், உலகமும் இணைந்திருப்பதுபோல தோன்றுகிறது. இதுதான் யோகாவின் சக்தி. அனைவரையும் யோகா ஒன்றிணைக்கிறது.
‘ஆரோக்கியமான முதுமைக்கான யோகா’ என்பதே இந்த ஆண்டுக்கான கருப்பொருள். வயது என்பது மனிதனின் திறனைக் குறைத்துவிடக் கூடாது. அதை உறுதிசெய்ய நாம் பணியாற்றலாம் என்பதே இதன் அர்த்தம். வயதாகும்போது மக்கள் தங்களது உடல் ஆற்றல், மன வலிமை, நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றை தக்கவைத்துக் கொள்ளவும், மனித வாழ்க்கை தொடர்ச்சியான வளர்ச்சியை நோக்கிச் செல்லவும் யோகா உதவுகிறது.
நாம் 20 வயதில் இருந்ததைவிட 40 வயதில் அதிக நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க வேண்டும். 30 வயதைவிட 50 வயதில் அதிக ஆற்றலுடன் இருக்க வேண்டும். 50 வயதைவிட 70 வயதில் வாழ்க்கை முறை நோய்களை எதிர்க்கும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இதுவே நம் இலக்காக இருக்க வேண்டும். இங்குதான் யோகா நமக்கு உதவ முடியும்.
யோகா ஒரு வாழ்க்கை முறை: யோகா என்பது ஒரு வருடாந்திர நிகழ்வாக சுருங்கிவிடாமல், அது ஒரு வாழ்க்கை முறையாக மாற வேண்டும். நமது தனிப்பட்ட வாழ்க்கை முறைக்கு மட்டுமின்றி, உலகின் சிறந்த எதிர்காலத்துக்கும் யோகா அவசியம். யோகாவை ஒரு நாளுக்கு மட்டுமானதாகவோ, ஒரு நிகழ்ச்சிக்கு மட்டுமானதாகவோ மட்டுப்படுத்த மாட்டோம். யோகாவை நம் வாழ்வின் ஒரு பகுதியாக, நம் குடும்பங்களின் ஒரு பகுதியாக, எதிர்கால சந்ததியின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவும் மாற்றுவோம். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற யோகா அமர்வில் கலந்து கொண்டார், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் டெல்லியின் நேரு பூங்காவில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் பங்கேற்றார். மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் ஜே.பி. நட்டா ஆகியோரும் யோகா தின நிகழ்வுகளில் பங்கேற்றனர்.