பிரிஜ் பூஷன், வினேஷ் போகத்
புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இருந்து பிரிஜ் பூஷன் சரண் சிங்கை விடுவித்தது டெல்லி நீதிமன்றம். அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக முன்னாள் எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 6 மல்யுத்த வீராங்கனைகளும், ஒரு மைனர் வீராங்கனையும் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது உலக அளவில் கவனம் பெற்றது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி போலீஸார் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இரு எப்ஐஆர் பதிவு செய்தனர். அதில் ஒன்று போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தது. மற்றொன்று பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு. இதில் போக்சோ வழக்கு கடந்த ஆண்டு நீதிமன்றம் முடித்து வைத்தது.
இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இருந்து பிரிஜ் பூஷனை டெல்லி நீதிமன்றம் விடுவித்தது. அவருடன் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் செயலாளர் வினோத் தோமரையும் நீதிமன்றம் விடுவித்தது. இந்த தீர்ப்பை கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் அஸ்வினி அறிவித்தார்.
வினேஷ் போகத் ட்வீட்
“பிரிஜ் பூஷன் விடுவிப்பு தொடர்பாக நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மல்யுத்த வீராங்கனைகள் அனைவரும் முடிவு செய்துள்ளோம். எங்கள் தரப்பு வழக்கறிஞர்களிடம் இதை தெரிவித்துள்ளோம். கூடிய விரைவில் மேல்முறையீடு செய்யப்படும். நாங்கள் எங்களது நம்பிக்கையை இழக்கவில்லை. எங்கள் சட்ட போராட்டம் தொடரும்.
பிரிஜ் பூஷனுக்கு அரசு துணையாக உள்ளது. பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் அச்சுறுத்தப்படுகின்றனர். அதனால் வழக்கில் இருந்து சிலர் விலகி உள்ளனர். இந்த வழக்கில் தொடக்கம் முதலே அவரை காக்கும் பணியில் அரசு ஈடுபடுகிறது.
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அவர் குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்தது வருத்தம் தருகிறது. அவருக்கு எதிராக துணிச்சலுடன் வீதிகளில் போராட்டம் மேற்கொண்டோம். அதே துணிவோடு எங்களது போராட்டம் தொடரும்” என்று வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.