மத்திய மகளிர், குழந்தைள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி

 
இந்தியா

“பெண்களின் பணித்திறனை அதிகரிக்க பணியிட பாதுகாப்பு மிகவும் முக்கியம்” - மத்திய அமைச்சர்

மோகன் கணபதி

புதுடெல்லி: பெண்களின் பணித்திறனை அதிகரிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய தேசிய வளர்ச்சியை அடையவும் பணியிட பாதுகாப்பு அடிப்படையானது என்று மத்திய மகளிர், குழந்தைள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி தெரிவித்துள்ளார்.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான POSH சட்டம் பற்றிய இரண்டு நாள் தேசிய விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுடெல்லியில் இன்று (17.07.2026) தொடங்கியது. தேசிய மகளிர் ஆணையம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்னபூர்ணா தேவி, அரசின் உயர் அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் அன்னபூர்ணா தேவி, “பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க பாதுகாப்பான, கண்ணியமிக்க, அனைவரையும் உள்ளடக்கிய பணியிடங்களை உறுதி செய்வது அவசியம். கண்ணியத்துடனும் அச்சமின்றியும் பணிபுரியும் உரிமை அனைத்து மகளிருக்கும் உண்டு.

பாதுகாப்பான சூழலை உருவாக்குவது என்பது அரசுகள், வேலைவழங்குவோர், நிறுவனங்கள் என அனைவருக்குமான கூட்டுப் பொறுப்பாகும். பெண்களின் பணித்திறனை அதிகரிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய தேசிய வளர்ச்சியை அடையவும் பணியிட பாதுகாப்பு அடிப்படையானது.

பணியிடங்களில் மாறி வரும் சூழல் புதிய சவால்களை உருவாக்கி உள்ளன. இதற்கு நிறுவன ரீதியிலான நடவடிக்கைகளை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். புகார்கள் மீது உரிய நேரத்தில் தீர்வு காண்பதை உறுதி செய்ய வேண்டும். அதேநேரம், நியாயமான விசாரணை நடைமுறைகளும் தனியுரிமை பாதுகாப்பும் மிகவும் முக்கியமானவை.

வெளிப்படைத்தன்மையுடன் உரிய நேரத்தில் குறைகளைத் தீர்ப்பதில் ஷீ பாக்ஸ் (SHe-Box) இணையதளத்தின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புகார்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்வு காண்பதை எளிதாக்கும் ஒரு முக்கிய டிஜிட்டல் தளமாக இந்த இணையதளம் உருவெடுத்துள்ளது.

வேலை வழங்குவோர் மற்றும் நிறுவனத் தலைவர்கள் அதிக பொறுப்புணர்வை வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் கண்ணியம், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை அடிப்படையாகக் கொண்ட பணியிட கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT