புதுடெல்லி: ‘இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களின்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட போலீஸார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி இடதுசாரி மகளிர் அமைப்புகள் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அகில இந்திய முற்போக்கு மாதர் சங்கம், அகில இந்திய மகிளா கலாச்சார சங்கம், இந்திய பெண்ணியக் கூட்டமைப்பு, அகில இந்திய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட பல்வேறு மகளிர் மற்றும் மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த பேரணியை நடத்தின.
குருத்வாரா பங்களா சாஹிப் அருகே திரண்ட போராட்டக்காரர்கள், டெல்லி காவல் தலைமையகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். பாலியல் அத்துமீறல்கள், தேர்தல் முறைகேடுகள் ஆகியவற்றுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், பெண் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல்களுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், “ஆண் காவல்துறை அதிகாரிகள், பெண் போராட்டக்காரர்களைத் தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் வெளியாகி உள்ளன. காவல் வாகனங்கள் மற்றும் தடுப்பு மையங்கள் ஆகியவற்றிலும் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இளம்பெண் பத்திரிகையாளர் ஒருவர், ஆண் உதவி காவல் ஆணையர் அந்தஸ்தில் உள்ள ஓர் அதிகாரியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அந்தப் பெண் புகார் அளிக்க முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டு, அவர் மீதும் மற்றவர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் இத்தகைய திட்டமிட்ட செயல்கள், பெண்களின் குரலை ஒடுக்கும் நோக்கம் கொண்டவை. இது பெண்களை அரசியலில் இருந்தும் பொது வாழ்க்கையில் இருந்தும் வெளியேற்றும் ஒரு பெரிய சதித்திட்டத்தின் வெளிப்பாடு.
பாலியல் வன்முறைக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தகைய குற்றங்களுக்கு தண்டனை கிடைக்காது என்ற நிலை முடிவுக்கு வர வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.