மைசூரு பட்டுப் புடவைகளை வாங்குவதற்காக கடை வாசலில் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.
பெங்களூரு: கர்நாடக அரசின் பட்டுத் தொழில் கழகத்தின் சார்பில் விற்பனை செய்யப்படும் மைசூரு பட்டுப் புடவைகள் மிகவும் பாரம்பரியமானவை. புவிசார் குறியீடு பெற்ற இந்த புடவைகளுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவுகிறது. இதனை வாங்குவதற்காக கர்நாடகாவை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் குவிவதால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் டோக்கன் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
பெங்களூருவில் உள்ள கர்நாடக அரசின் பட்டுத் தொழில் கழகத்தின் விற்பனையகத்தில் புடவை வாங்குவதற்காக பெண்கள், ஆண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் நேற்று அதிகாலை 4 மணிக்கே வரிசையாக அணிவகுத்து நின்றனர். பெங்களூருவின் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் போர்வை போர்த்திக்கொண்டு நாற்காலிகளில் அமர்ந்தவாறு நீண்ட நேரம் காத்திருந்தனர். கடையின் பணியாளர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
தேர்வு செய்ய முடியாது: காலை 10 மணிக்கு கடை திறக்கப்பட்டதும் பட்டுப் புடவைக்கான டோக்கன் வழங்கப்பட்டது. ரூ.23 ஆயிரம் முதல் ரூ.2.5 லட்சம் வரையிலான விலையில் பட்டுப் புடவைகள் விற்பனை செய்யப்பட்டன. ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு புடவை மட்டுமே வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான புடவைகளை தேர்வு செய்வதற்கு அனுமதி இல்லை என கடையின் வாசலில் பதாகை வைக்கப்பட்டிருந்தது. வரிசையில் நின்று டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே புடவைகள் வழங்கப்பட்டன.
மைசூரு பட்டுப்புடவையை வாங்கிய மென்பொறியாளர் பிரியதர்ஷினி கூறும்போது, ‘‘நான் கடந்த 10 ஆண்டுகளாக மைசூரு பட்டுப் புடவைகளை வாங்கி வருகிறேன். பழையதாக ஆனாலும், உடுத்தும்போதெல்லாம் புதுசு போலவே இருக்கும். இதனை வாங்குவதற்காக பட்ட கஷ்டமெல்லாம் அப்போது மறந்துபோய் விடும்'' என்றார்.