இந்தியா

“எல்லை பாதுகாப்பில் ஆண்களைவிட பெண்களின் பங்களிப்பு அதிகம்” - அமித் ஷா

மோகன் கணபதி

பிகானிர் (ராஜஸ்தான்): எல்லை பாதுகாப்பில் ஆண்களின் பங்களிப்பைவிட பெண்களின் பங்களிப்பு அதிகம் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானின் பிகானிரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சஞ்சு எல்லைச் சாவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அமித் ஷா, “இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உருவாகி வரும் பாதுகாப்பு சவால்களையும், தொழில்நுட்ப அச்சுறுத்தல்களையும் கருத்தில் கொண்டு எல்லை பாதுகாப்புப் படைகளை நாம் மேம்படுத்த வேண்டும்.

தேசிய பாதுகாப்பை குறிவைக்க எதிரிகள் தொழில்நுட்ப வழிமுறைகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இது, எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படைகள், மாநில அரசுகள், சிவில் நிர்வாகம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.

எல்லையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவுக்குள் செய்யப்படும் எந்தவொரு சட்டவிரோத கட்டுமானமும் உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அதேபோல், எல்லைக் கிராமங்களில் ஏற்படும் மக்கள்தொகை மாற்றங்களும் அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

அனைத்துத் துறைகளிலும் ஆண் பணியாளர்களைப் போன்றே, பெண் பணியாளர்களையும் நியமித்து சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவை நாம் எடுத்தபோது, ஒரு விவாதம் எழுந்தது. எல்லையில் அவர்களுக்கு எத்தகைய பொறுப்புகளை கொடுக்க முடியும், அது அவர்களுக்கு எத்தகைய பயன்களைத் தரும் என்பது குறித்து அந்த விவாதம் இருந்தது. நான் பணிவுடன் ஒரு தகவலை பகிர விரும்புகிறேன்.

எல்லை பாதுகாப்பில் ஆண்களின் பங்களிப்பைவிட பெண்களின் பாதுகாப்பு அதிகமாக உள்ளது. 2030க்குள் அனைத்து சலுகைகளும் பெண்களுக்கும் சென்று சேரும்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எல்லைப் பாதுகாப்புப் படையினரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. நமது வீரர்கள் உறுதியாக நின்று அசைக்க முடியாத மனவுறுதியுடன் சவால்களை எதிர்கொண்டு உயர்ந்த மனு உறுதியை பேணுவதில் முக்கிய பங்காற்றினர். எப்போதும் போலவே, தேவைப்பட்ட போதெல்லாம் அவர்கள் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடியை கொடுத்தனர்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT