இந்தியா

“15 ஆண்டு கால திரிணமூல் ஆட்சி போதும் என இன்றைய தேர்தலில் மக்கள் தீர்ப்பு...” - பிரதமர் மோடி

மோகன் கணபதி

கொல்கத்தா: “மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் பெண்களும் இளைஞர்களும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கி உள்ளனர். டிஎம்சியின் 15 ஆண்டு கால ஆட்சி போதும் என்ற தீர்ப்பை அவர்கள் இன்று அளித்துள்ளனர்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “நான் அரசியலில் நுழைந்ததில் இருந்து கவனித்து வருகிறேன். கடந்த 50 ஆண்டுகளில் வன்முறை மிகக் குறைவாக இருந்த முதல் மேற்கு வங்கத் தேர்தல் இது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

கடந்த கால தேர்தல் நேரங்களில் ஒவ்வொரு வாரமும் யாராவது ஒருவர் தூக்கிலிடப்படுவார். அதை அவர்கள் தற்கொலை என்று சித்தரிப்பார்கள். அப்படி ஒரு வகையான குண்டர்களின் ஆட்சி நிலவி வந்தது. வங்க மண்ணில் ஜனநாயகத்தின் மாண்பை மீண்டும் ஒருமுறை நிலைநிறுத்தியதற்காக தேர்தல் ஆணையத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்வதில் தேர்தல் ஆணையம் பெற்றுள்ள வெற்றி மிக முக்கிய சாதனையாகும்.

தேர்தல் வாக்குப்பதிவில் முந்தைய அனைத்து சாதனைகளையும் வாக்காளர்கள் முறியடித்து வருகிறார்கள். பயம் விலகிச் செல்கிறது; நம்பிக்கை முன்னேறி செல்கிறது. பல ஆண்டுகளாக யாருடைய குரல்கள் ஒடுக்கப்பட்டிருந்தனவோ அவர்கள் இப்போது நம்பிக்கையுடன் உரக்கப் பேசுகிறார்கள். மாற்றம் தேவை; பாஜக ஆட்சி தேவை என அவர்கள் கூறுகிறார்கள்.

வாக்காளர்கள் அதிக அளவில் திரண்டு வாக்களிக்கும் இடங்களில் எல்லாம் பாஜக வலுவான மக்கள் ஆணையைப் பெற்றதை நாம் பார்த்திருக்கிறோம். மேற்கு வங்கத்தில் பாஜகவின் வெற்றிக்கான கொண்டாட்டங்கள் களைகட்டும். இனிப்புகளும் ஜால்முரியும் விநியோகிக்கப்படும்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக இருந்தனர். இன்று, அவர்கள் திரிணமூல் காங்கிரசின் குண்டர் ராஜ்ஜியத்துக்கு எதிராக நிற்கிறார்கள். தேர்தலில் முன்னிலை வகிப்பது பாஜக அல்ல; மேற்கு வங்க மக்களே.

10 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டன. சனல் ஆலைகளும் மூடப்பட்டன. ஊடுருவியவர்களுக்கு ஆதரவு அளிப்பதிலும் அவர்களின் நலன்களை முன்னெடுப்பதிலும் மட்டுமே திரிணமூல் காங்கிரஸ் முனைப்பு காட்டியது.

மே 4-ம் தேதிக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் நல்லாட்சியின் புதிய உத்தரவாதம் தொடங்கும்.

மத்துவா சமூகம், நாமசூத்திர சமூகம் மற்றும் அகதிக் குடும்பங்கள் திரிணமூல் காங்கிரஸைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. உங்களுக்கு எவராலும் தீங்கு விளைவிக்க முடியாது. இந்தியாவில் அடைக்கலத்தையும் கண்ணியத்தையும் தேடி யார் வந்திருந்தாலும் மோடி அவர்கள் பக்கம் உறுதியாக நிற்கிறார்.

புதிய அரசு அமைந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கும் செயல்முறை துரிதப்படுத்தப்படும். இது மோடியின் உத்தரவாதம்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT