இந்தியா

முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் பெயரில் மும்பை மூதாட்டியிடம் ரூ.3.75 கோடி மோசடி

டிஜிட்டல் கைது கும்பல் கைவரிசை

செய்திப்பிரிவு

மும்பை: ​முன்​னாள் தலைமை நீதிபதி சந்​திரசூட் பெயரில் ஒரு கும்​பல் மும்​பையைச் சேர்ந்த ஒரு மூதாட்​டி​யிடம் டிஜிட்​டல் கைது மோசடி செய்து ரூ.3.75 கோடியை ஏமாற்றி உள்​ளது தெரிய​வந்​துள்​ளது.

மும்​பையைச் சேர்ந்த ஒரு மூதாட்​டியை (68) கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி செல்​போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்​பு​கொண்ட மர்ம நபர்​கள், குலாபா காவல் நிலைய அதி​காரி​கள் எனக் கூறி​யுள்​ளனர். அவரது வங்​கிக் கணக்கு ரூ.6 கோடி பணமோசடி வழக்​கில் சிக்​கி​யுள்​ள​தாகக் கூறி அவரை மிரட்​டி​யுள்​ளனர். அவரை ‘டிஜிட்​டல் கைது' செய்​வ​தாகக் கூறி, 24 மணி நேர​மும் வீடியோ அழைப்​பின் மூலம் கண்​காணிப்​பில் வைத்​திருந்​தனர்.

பின்​னர், எஸ்​.கே.ஜெய்​ஸ்​வால் என்​பவர் அந்த மூதாட்​டியை தொடர்​பு​கொண்​டு, தான் ஒரு சிபிஐ விசா​ரணை அதி​காரி என கூறி​யுள்​ளார். அவர், உங்​களுக்கு ஜாமீன் கிடைக்க ஏற்​பாடு செய்​கிறேன் எனக் கூறி​யுள்​ளார். இதற்​காக, குணா​திச​யத்​தைப் பரிசோ​திக்க வேண்​டி​யிருப்​ப​தாகக் கூறி அந்த மூதாட்​டியை தனது வாழ்க்​கை​யைப் பற்றி ஒரு கட்​டுரை எழுத வைத்​துள்​ளார். பின்​னர், ஒரு வீடியோ அழைப்​பில் நீதிபதி உடை​யில் தோன்​றிய நபர், தன்னை ‘‘நீ​திபதி சந்​திரசூட்’’ என்று கூறிக்​கொண்டு மூதாட்​டி​யின் ஜாமீன் மனுவை நிராகரிப்​பது போல நாடக​மாடி​யுள்​ளார்.

இதையடுத்து அவரை தொடர்​பு​கொண்ட அந்த கும்​பல், வழக்​கி​லிருந்து விடுபட வேண்​டு​மா​னால், சொத்​துகளைத் தணிக்கை செய்ய வேண்​டும் என்று கூறி முதலீட்டு விவரங்​களை பெற்​றுள்​ளனர். இதையடுத்​து, முதலீட்டை தங்​கள் பெயருக்கு மாற்​றித் தந்​தால் பின்​னர் அந்​தத் தொகை திருப்​பித் தரப்​படும் என வாக்​குறுதி அளித்​துள்​ளனர். இதன்​படி, சுமார் ரூ.3.75 கோடியை மோசடிக்​காரர்​கள் பெற்​றுள்​ளனர். அக்​டோபர் மாதம் வரை அந்​தப் பணம் திரும்ப வராத​தால், தான் ஏமாற்​றப்​பட்​டதை உணர்ந்த மூதாட்டி சைபர் போலீசில் புகாரளித்​தார்.

மும்பை மேற்கு சைபர் பிரிவு போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், மோசடிப் பணத்​தில் ரூ.1.7 கோடி குஜ​ராத்​தைச் சேர்ந்த ஒரு​வரது கணக்​குக்​குச் சென்​றது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதைத்​தொடர்ந்​து, சூரத்​தைச் சேர்ந்த ஜிதேந்​திர பியானி (46) என்​பவரை போலீ​சார் கைது செய்​துவி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

மற்றொரு மோசடி: இதேபோன்ற ஒரு பாணியில், ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரி டம் ரூ.20 லட்சம் மோசடி செய்த வழக்கில் காந்திநகரைச் சேர்ந்த கவுரவ் பலோட் (25) என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த மோசடிகளில் ஈடுபடும் முக்கிய குற்றவாளிகள் வெளிநாடுகளில் இருந்து செயல்படுவதால், அவர்களைப் பிடிப்பதில் சிக்கல் நீடிப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT