புதுடெல்லி: டெல்லியில் பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண் திருமணமானவர் என்றும், அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
டெல்லியின் பிதாம்புரா பகுதியில் உள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், மங்கோல்புரி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். கடந்த திங்கட்கிழமை இரவு வழக்கம் போல தனது வேலை முடிந்ததும் அவர் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
ராணி பாக் பகுதியில் சாலையோரம் ஒரு ஸ்லீப்பர் கோச் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. பேருந்தின் கதவு அருகே நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் அந்தப் பெண், மணி என்னவென்று கேட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக, அந்தப் பெண்ணை அவர்கள் வலுக்கட்டாயமாகப் பேருந்திற்குள் இழுத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து நங்லோய் பகுதியை நோக்கி பேருந்தை ஓட்டிச் சென்றவாறே, ஓட்டுநரும் நடத்துநரும் அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரையும் போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். அப்பெண் திருமணமானவர் என்றும், அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் பேருந்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், "பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் பேருந்தின் பணியாளர்களே இந்தக் குற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம், 2012-ம் ஆண்டு டெல்லியில் நிர்பயாவுக்கு நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கின் கொடூர நினைவுகளை மீண்டும் தட்டி எழுப்பியுள்ளதாக அமைந்துள்ளது.