ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் | கோப்புப் படம்
புதுடெல்லி: “இந்துக்கள் இல்லாமல் உலகம் இருக்காது என்றும் இந்து சமூகம் அடக்குமுறையை ஒருபோதும் அனுமதிக்காது என்றும்” ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பாகவத், “உலகின் ஒவ்வொரு தேசமும் எல்லா வகையான சூழ்நிலைகளையும் கண்டிருக்கிறது. யுனான் (கிரீஸ்), மிஸ்ர் (எகிப்து), ரோம் என அனைத்து நாகரீகங்களும் பூமியில் இருந்து அழிந்துவிட்டன. நமது நாகரீகத்தில் ஏதோ உள்ளது, அதனால்தான் நாம் இன்னமும் இங்கே இருக்கிறோம்.
பாரதம் என்பது ஒரு அழியாத நாகரீகத்தின் பெயர். நமது சமூகத்தில் ஒரு வலையமைப்பை உருவாக்கியுள்ளோம். அதனால்தான், இந்து சமூகம் எப்போதும் இருக்கும். இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும். உலகை நிலை நிறுத்துவதற்கு இந்து சமூகம் மையமானது.
தேசத்தை கட்டியெழுப்பும்போது முதல் தேவை, நாட்டின் வலிமை. வலிமை என்றால் பொருளாதார வலிமை. நமது பொருளாதாரம் மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று சொன்னால், சில நேரங்களில் அது தவறான பொருளை தரும். எனவே, நமது நாட்டின் பொருளாதாரம் முழுமையாக சுய சார்பு கொண்டதாக இருக்க வேண்டும். நாம் யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது.
நாம் நமது பொருளாதாரத்தை தற்சார்பு பொருளாதாரமாக மாற்றுவது ஒன்றும் கடினமானது அல்ல. வேரூன்றிய பல பிரச்சினைகளை நமது சமூகம் சமாளித்து வந்துள்ளது என்பதற்கு ஏராளாமன உதாரணங்கள் உள்ளன. உதாரணத்துக்கு நக்சலிசம். சமூகம் இனி இதை பொறுத்துக்கொள்ளாது என முடிவெடுத்ததால் இன்று அது முடிவுக்கு வந்துள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான நமது சுதந்திர போராட்டமும் அப்படித்தான்.
பிரிட்டிஷ் பேரரசில் சூரியன் மறைவதில்லை என்பார்கள். ஆனால், இந்தியாவில் அவர்களின் சூரியன் ஏற்கனவே மறையத் தொடங்கியிருந்தது. 90 ஆண்டுகளாக நாம் இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டோம். அடக்குமுறைக்கான குரலை நமது சமூகம் ஒருபோதும் அனுமதித்தது இல்லை. சில நேரங்களில் நமது குரல் பலவீனமடைந்தது. சில சமயங்களில் அது வலுவடைந்தது. ஆனால், ஒருபோதும் அது இறக்க நாம் அனுமதித்தது இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.