இந்தியா

“தொகுதி மறுவரையறை மசோதா கூட்டாட்சியின் கட்டமைப்பை சிதைத்துவிடும்” - சசி தரூர்

மோகன் கணபதி

புதுடெல்லி: தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக விரிவாக விவாதிக்க வேண்டும் என மக்களவையில் வலியுறுத்திய காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், அவசர கதியில் நிறைவேற்றினால் அது கூட்டாட்சியின் கட்டமைப்பைக் சிதைத்துவிடும் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கில் அரசியல் சாசனத்தை திருத்துவதற்கான (131வது திருத்தம்) மசோதாவையும், இந்த மசோதா டெல்லி, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களிலும் அமல்படுத்துவதற்கான யூனியன் பிரதேச சட்டத் திருத்த மசோதாவையும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. மேலும், அனைத்து மாநிலங்களிலும் 50% அளவுக்கு தொகுதிகளை அதிகரிக்கும் நோக்கில் தொகுதி மறுவரையறை மசோதாவையும் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

இந்த மசோதா மீது இரண்டாவது நாளாக இன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய சசி தரூர், “பெண் சக்திக்கு நீதி எனும் பரிசை அரசாங்கம் வழங்கியிருப்பதாக பிரதமர் கூறுகிறார். ஆனால், அந்தப் பரிசை முள் கம்பிகளின் மேல் அவர் சுற்றிவைத்துள்ளார். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதை, தொகுதி மறுவரையறை, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுடன் இணைத்து முடிச்சுப் போட்டுள்ளார்.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான ஒரு தார்மிக கடமையை, மக்கள் தொகை சார்ந்த கண்ணிவெடிகள் நிறைந்த ஒரு சிக்கலான களத்துடன் நாம் ஏன் முடிச்சுப் போட வேண்டும்?

பெண்களுக்கான இட ஒதுக்கீடு பலன்தரத் தயாராக உள்ளது. அதை தொகுதி மறுவரையறை உடன் இணைப்பது என்பது, இந்தியப் பெண்களின் லட்சியங்களை, பணயக் கைதிகளாகப் பிடித்து வைப்பதற்குச் சமம். தொகுதி மறுவரையறை என்பது கூட்டாட்சியின் கட்டமைப்பையே சிதைத்துவிடக்கூடிய சிக்கல்கள் நிறைந்தது. தொகுதி மறுவரையறை செயல்முறை குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். இதை அவசர கதியில் மேற்கொள்ள முடியாது. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுங்கள். நாங்கள் அதற்கு ஆதரவு அளிப்போம்.

தொகுதி மறுவரையறையைப் பொறுத்தவரை, அதை நாம் ஒத்திவைப்போம். தயவுசெய்து நாட்டின் பரந்த நலன்களைக் கருத்தில் கொள்ளுங்கள். தொகுதி மறுவரையறைக்கு கவனமான ஆலோசனைகள் தேவை. இது பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை ஆழப்படுத்தவும், கூட்டாட்சி சமநிலையை வலுவிழக்கச் செய்யவும் கூடும். தொகுதி மறுவரையறையின் விளைவுகள் என்ன என்பது குறித்து நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். இதில் ஆழ்ந்த கலந்தாய்வு தேவைப்படுகிறது.

அனைத்து மாநிலங்களின் எண்ணிக்கையையும் 50% அதிகரிப்பது என்ற அமித் ஷாவின் சூத்திரம், ஒரு நிலையற்ற அரசியல் அறிக்கை. இது சட்டமன்றத்தால் உறுதி அளிக்கப்பட்ட ஒன்றல்ல. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது காட்டப்பட்ட அதே அவசரத்துடன் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் அது பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மையை உருவாக்கும் அபாயம் உள்ளது. அத்தகைய மறுவரையறை இறுதியில் ஒரு அரசியல் அரக்கத்தனமாகவே மாறிவிடும். எனவே இதைச் செய்யாதீர்கள்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT