திருவனந்தபுரம்: வி.டி.சாவர்க்கரின் பெயரில் வழங்கப்படும் விருதை ஏற்க மாட்டேன் என்றும், அந்த விழா நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் திட்டவட்டமாக கூறினார்.
புதுடெல்லியில் ஹைரேஞ்ச் கிராமப்புற மேம்பாட்டு சங்கத்தின் (HRDS) 2025-ம் ஆண்டுக்கான வீர சாவர்க்கர் சர்வதேச விருதைப் பெறுபவர்களில் ஒருவராக தரூர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சாவர்க்கர் குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அவரின் பெயரிலான விருது சசி தரூருக்கு அறிவிக்கப்பட்டது அக்கட்சியில் சலசலப்பை உருவாக்கியது.
இதுகுறித்து பேசிய கேரள காங்கிரஸ் தலைவர் கே. முரளீதரன், “பிரிட்டிஷாருக்கு தலைவணங்கிய சாவர்க்கரின் பெயரிலான எந்த விருதையும் தரூர் உட்பட கட்சியின் எந்த உறுப்பினரும் ஏற்கக்கூடாது. சசி தரூர் இந்த விருதை ஏற்றுக்கொள்வார் என்று நான் நம்பவில்லை, ஏனெனில் அவ்வாறு செய்வது காங்கிரஸ் கட்சியை அவமதிக்கும் செயல்” என்று கூறினார்.
இந்தச் சூழலில், சாவர்க்கர் பெயரிலான விருதை ஏற்க மாட்டேன் என்றும், விருதின் தன்மை மற்றும் அதை வழங்கும் அமைப்பு குறித்து தெளிவுபடுத்தப்படாத நிலையில், அந்த விழா நிகழ்விலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று சசி தரூர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், "நான் விருதைப் பெற ஒப்புக் கொள்ளாமல் எனது பெயரை அறிவித்தது ஏற்பாட்டாளர்களின் பொறுப்பற்ற செயல்" என்று கூறினார்.
சசி தரூரின் அறிக்கையைத் தொடர்ந்து, விருதை வழங்கும் ஹைரேஞ்ச் கிராமப்புற மேம்பாட்டு சங்கத்தின் (HRDS) இந்தியாவின் செயலாளர் அஜி கிருஷ்ணன், சசி தரூருக்கு இந்த விஷயம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.
இதுபற்றி பேசிய அஜி கிருஷ்ணன், “எங்கள் அமைப்பின் பிரதிநிதிகளும், விருது நடுவர் மன்றத் தலைவரும் தரூரை அழைக்க அவரது இல்லத்தில் சந்தித்தோம். விருது பெற்ற மற்றவர்களின் பட்டியலை அவர் கேட்டார். நாங்கள் அவருக்குப் பட்டியலைக் கொடுத்தோம். நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என்று அவர் இன்னும் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் இதை ஒரு பிரச்சினையாக மாற்றியதால் அவர் பயந்து போயிருக்கலாம்” என்று கூறினார்.
இந்தச் சூழலில், இந்த விருதை ஏற்பதா, இல்லையா என்பது தரூரின் முடிவு என்று கேரள சட்ட அமைச்சர் பி. ராஜீவ் தெரிவித்தார்.