ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் பெட்டல் கெலாட்
நியூயார்க்: தீவிரவாதத்தின் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என ஐ.நா. சபையில் பாகிஸ்தானுக்கு இந்திய தூதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் 81-வது ஐ.நா. பொது சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் உரையாற்றினார்.
அப்போது அவர் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்தார். இதையடுத்து, ‘பதிலளிக்கும் உரிமையை’ பயன்படுத்தி ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் பெட்டல் கெலாட் நேற்று பேசியதாவது:
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்பின் கருத்துகள் விசித்திரமானவை. அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்தது என்பதை இந்த சபைக்கு நினைவூட்டுகிறேன். பகலில் பாதுகாப்பை பேணுவதாகக் கூறும் பாகிஸ்தான், இரவில் தீவிரவாதத்தை முன்னெடுக்கிறது.
தீவிரவாதிகளுக்கு ஓடுவதற்கும், ஒளிவதற்கும் இடமில்லை என்பதை, ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை வாயிலாக இந்தியா கடந்த ஆண்டு நிரூபித்தது. பாகிஸ்தான் என்ன கூறுகிறது என்பதற்காக அல்ல, அது உண்மையில் என்ன செய்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு உலக நாடுகள் அதை மதிப்பிட வேண்டும்.
ராணுவம் நடத்தும் ஆட்சி
பாகிஸ்தான் ஆதரிக்கும் தீவிரவாதத்துக்கு கட்டாயம் பின்விளைவுகள் இருக்கும். இந்தியா, தன்னைத் தற்காத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒருபோதும் தயங்காது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்து பாகிஸ்தான் பேசுவது வேடிக்கையானது. அது ராணுவத்துக்காக, ராணுவத்தால், ராணுவமே நடத்தும் ஆட்சி. ஜம்மு மற்றும் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும். அது அப்படியே தொடரும். இவ்வாறு கெலாட் பேசினார்.