இந்தியா

“பழிவாங்கும் நடவடிக்கை கூடாது” - உண்ணாவிரதத்தை நிறைவு செய்ய சோனம் வாங்சுக் நிபந்தனை

வெற்றி மயிலோன்

புது டெல்லி: “போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்தவித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அரசு உறுதியளித்தால் மட்டும் எனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வேன்” என்று சோனம் வாங்சுக் புதிய நிபந்தனை விதித்துள்ளார்.

நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சோனம் வாங்சுக் 25-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இந்தச் சூழலில், மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருக்கு சோனம் வாங்சுக் எழுதிய கடிதத்தில், “நேற்றிரவு மருத்துவமனையில் என்னைச் சந்தித்ததற்கும், எனது உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு நீங்கள் விடுத்த வேண்டுகோளுக்கும் நன்றி.

நமது உரையாடலின்போது, ​​பின்வரும் விஷயங்களை அரசு பரிசீலிக்கும் என்று எனக்கு உறுதியளித்தீர்கள்:

> தேர்வு வினாத்தாள் கசிவினால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல்.

> கல்வி அமைச்சரின் ராஜினாமா குறித்த பரிசீலனை உட்பட, வினாத்தாள் கசிவில் அரசின் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான அர்த்தமுள்ள நாடாளுமன்ற விவாதம்.

காவல் துறையின் அத்துமீறல்கள் இருந்தபோதிலும், ஜூலை 20 அன்று நடைபெற்ற நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி மிகவும் அமைதியாக நடைபெற்றது. ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் பங்கேற்றவர்களின் பொறுமையையும் அர்ப்பணிப்பையும் ஒட்டுமொத்த தேசமும் உலகமும் கண்டன. இதில் பங்கேற்றவர்கள் மீது சட்ட வழக்குகள், துன்புறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகள் மூலம் ஜனநாயக நிறுவனங்களின் மீதான நம்பிக்கை மேலும் சிதைக்கப்படாது என்று நான் மனதார நம்புகிறேன்.

உங்கள் வருகைக்குப் பிறகு, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 65 எம்.பிக்கள் எனக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள் அனைவரும் எனது உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளனர். நானும் அதை ஏற்றுக்கொள்கிறேன். நான் வாழ விரும்புகிறேன்.

எனது மாணவர்களிடமும், கல்விப் பணியிடத்துக்கும், எனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய பணிகளுக்கும் திரும்ப விரும்புகிறேன். ஆனால், எந்த இளைஞர்களுக்காக இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டதோ, அவர்களைப் பலிகொடுத்துவிட்டு என்னால் அப்படிச் செய்ய முடியாது.

எனவே, இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற இளம் போராட்டக்காரர்கள் எவரும் தண்டனைக்குரிய அல்லது பழிவாங்கும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள மாட்டார்கள் என்று அரசிடமிருந்து தெளிவான உறுதியை நான் கோருகிறேன். நியாயமான கல்வி முறைக்காகக் குரல் கொடுத்தது மட்டுமே அவர்களின் ‘குற்றம்’ ஆகும்.

அத்தகைய உறுதிமொழி அளிக்கப்பட்டால் நான் எனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வேன். அத்தகைய உறுதிமொழி இல்லாத பட்சத்தில், காலவரையற்ற முறையில் எனது உண்ணாவிரதத்தைத் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்படும். போராட்டத்தை ஒடுக்க இனிமேல் அதிகப்படியான காவல்துறை பலப்பிரயோகம் பயன்படுத்தப்படாது என்றும் நான் நம்புகிறேன்.

நமது ஜனநாயகத்தின் எதிர்காலம், அதனுடன் உடன்படுபவர்களை அது எவ்வாறு நடத்துகிறது என்பதில் இல்லை. மாறாக, இளைஞர்கள் துணிச்சல், நம்பிக்கை மற்றும் உறுதியுடன் பேசத் துணியும்போது அவர்களை அது எவ்வாறு நடத்துகிறது என்பதில்தான் உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT