இந்தியா

இந்திய - மலேசிய பாதுகாப்பு, பொருளாதார உறவுகள் மேம்படுத்தப்படும்: பிரதமர் மோடி நம்பிக்கை!

மோகன் கணபதி

புதுடெல்லி: இந்தியா, மலேசியாவுடன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்த விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியாவுக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று புறப்பட்டுச் சென்றார். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார்.

          

மலேசியவுக்குப் புறப்படும் முன்பாக அவர் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், ‘‘இந்தியாவுடன் ஆழமான, விரிவான உறவுகளைக் கொண்ட நாடு மலேசியா. எனது நண்பர் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், நான் மலேசியாவுக்கு பயணம் செய்கிறேன். இந்த பயணம் நமது விரிவான மூலோபாய பங்களிப்பை வலுப்படுத்துவதோடு, அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்தும்.

இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் துடிப்பான தாயகமாக மலேசியா உள்ளது. கோலாலம்பூரில் இன்று நடைபெறும் சமூக நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அங்கு, புலம்பெயர்ந்த மக்களுடன் உரையாட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்’’ என தெரிவித்துள்ளார்.

மேலும், ‘‘இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையேயான வரலாற்று உறவுகள் சமீப ஆண்டுகளில் உறுதியான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. பிரதமர் அன்வர் இப்ராஹிமுடனான எனது பேச்சுவார்த்தைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நமது விரிவான மூலோபாய பங்களிப்பை நாம் மேலும் வலுப்படுத்துவோம்.

இரு நாடுகளின் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதோடு, பொருளாதாரம் மற்றும் புத்தாக்கத்தில் பங்களிப்பை மேம்படுத்தவும், நமது ஒத்துழைப்பை புதிய துறைகளுக்கு விரிவுபடுத்தவும் நாங்கள் இலக்கு நிர்ணயிப்போம்’’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT