அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த மினேஷ் பாய், கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி ரத யாத்திரை திருவிழா நாளில் தனது மனைவி கோமல்பென் சோலங்கியை ஊர் சுற்றிக் காட்டுவதாகக் கூறி வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
நள்ளிரவில் மனைவியை சபர்மதி ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத நேரத்தில் மனைவியை தூக்கி ஆற்றில் வீசியுள்ளார். பிறகு அங்கிருந்து தப்பிய மினேஷ் மறுநாள் கலுபூர் காவல் நிலையம் சென்று தனது மனைவியை காணவில்லை என்று ஒரு பொய் புகாரைப் பதிவு செய்துள்ளார்.
சில மணி நேரத்துக்கு பிறகு கோமல்பென் உடல் கண்டெடுக்கப்பட்ட போது, அது விபத்தால் ஏற்பட்ட மரணம் என்றே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அகமதாபாத் போலீஸார் இந்த வழக்கின் தொழில் நுட்பத் தரவுகள் மற்றும் பழைய சாட்சிகளின் வாக்கு மூலங்களை மறு ஆய்வு செய்தனர்.
இந்த விசாரணையின் போது, திருமணமான நான்கே மாதங்களில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மினேஷ் இந்த கொடூரக் குற்றத்தை செய்தது அம்பலமானது. இதையடுத்து மினேஷை போலீஸார் கைது செய்தனர்.