ஆர்.அசோகா

 
இந்தியா

‘பட்டியலின மக்கள் நிதியை இலவச திட்டங்களுக்கு பயன்படுத்தியது ஏன்?’ - கர்நாடக எதிர்க்கட்சி தலைவர்

இரா.வினோத்

பெங்களூரு: 'பட்டியலின மக்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கர்நாடக அரசு இலவச திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்தது ஏன்?' என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து கர்நாடக எதிர்க்கட்சி தலைவரும் பாஜக மூத்த தலைவருமான ஆர்.அசோகா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் கடந்த பட்ஜெட்டில் பட்டியல் சாதி துணைத் திட்டம் (SCSP) மற்றும் பழங்குடி துணைத் திட்டம் (TSP) ஆகியவற்றின் கீழ் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான நல திட்டங்களுக்காக ரூ.42,018 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் கிட்டத்தட்ட ரூ.35,000 கோடி இலவச திட்டங்களுக்காக மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பட்டியலின வளர்ச்சி திட்டங்களுக்கு சுமார் ரூ.7000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

          

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டியலின மக்களின் நிதி தொடர்ந்து வேறு திட்டங்களுக்கு திருப்பி விடப்பட்டு வருகிற‌து. இதனால் பட்டியலின மக்களின் க‌ல்வி, சுகாதாரம், மேம்பாடு ஆகியவற்றுக்கு நிதி இல்லாமல் அந்தத் துறை திணறிவருகிறது.

காங்கிரஸ் அரசு தனது இலவச திட்டங்களுக்காக பட்டியலின மக்களின் நிதியை திருடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. பட்டியலின மக்களின் நிதியை சித்தராமையா அரசு இப்படி திருடுவதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஏன் பேசுவதில்லை?

மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என பேசும் ராகுல் காந்தி, பட்டியலின மக்களின் பிரதிநிதித்துவம் குறித்து ஏன் பேசுவதில்லை?

காங்கிரஸ் அரசின் இந்த நிறுவன மயமாக்கப்பட்ட அநீதியை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்த இருக்கிறோம். இந்த தவறை சரி செய்வது தொடர்பாக, சித்தராமையா வருகிற பட்ஜெட் உரையிலே, உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT