புதுடெல்லி: காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று பேசியதாவது: இந்தியப் பகுதிக்குள் சீனா ஊடுருவியுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, மோடி அரசு வெளிப்படையாக விளக்கம் அளித்திருக்க வேண்டும்.
வழக்கம்போல இந்தத் தகவல்கள் தவறானவை என்று அரசு மறுத்துள்ளது. ராணுவம் தனது கடமையை சிறப்பாகச் செய்து வரும் நிலையில், சீனாவுடனான எல்லை தொடர்பான முக்கியமான கேள்விகளுக்கு மத்திய அரசு தெளிவான தகவல்களை வழங்கவில்லை.
அயோத்தி ராமர் கோயிலுக்கு மக்கள் வழங்கிய காணிக்கை எவ்வளவு? எவ்வளவு தங்கம், வெள்ளி மற்றும் பிற விலைமதிப்புமிக்க பொருட்கள் சேகரிக்கப்பட்டன? அந்த சொத்துகளின் கணக்கு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.
கீழ்நிலையில் உள்ள சிலரை மட்டும் சிறையில் அடைப்பதால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடாது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டு, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
இளைஞர்களின் பிரச்சினைகள்
மேலும், அரசின் தவறான கொள்கைகளே இளைஞர்களை ஆழ்ந்த விரக்திக்குள் தள்ளியுள்ளன. மத ரீதியான பதற்றத்தை உருவாக்கும் போட்டிக்கும், இலவசத் திட்டங்களுக்கான போட்டிக்கும் மத்தியில், இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மிகக் கடுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் நாடு முழுவதும் 94,000 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
உயர்கல்வி தொடர்ந்து அதிக செலவு மிக்கதாக மாறி வருகிறது. கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. மேலும், மாணவர்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு அரசு உரிய கவனம் செலுத்தாமல் இருப்பதாலேயே மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராடும்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கார்கே கூறினார்.