புதுடெல்லி: “எனது குடும்பத்தைப் பற்றிப் பரப்பப்படும் உண்மையற்ற தகவல்களே, நான் சுயசரிதை எழுதத் தூண்டுகோலாக அமைந்தன” என்று தனது சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் சோனியா காந்தி விவரித்தார்.
'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' என்று பெயரிடப்பட்டுள்ள சோனியா காந்தியின் சுயசரிசை புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சோனியா காந்தி, “எனது குடும்பத்தினர், என் மாமியார், என் கணவர், என் மகன், என் மகள் மற்றும் என்னைப் பற்றிப் பல விஷயங்கள் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை முற்றிலும் உண்மையற்றவை.
எங்களைப் பற்றி பல கட்டுக்கதைகள் புனையப்படுகின்றன. உண்மையைச் துளியும் சாராத, மனதை நோகடிக்கும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. எனவே, எனது உணர்வுகளை வெளிப்படுத்தவும், எனது குடும்பத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த உண்மைகளைப் பகிர்ந்துகொள்ளவும் இது ஒரு வழியாக இருக்கும் என்று சுயசரிதை எழுத தொடங்கினேன்.
தொடக்கத்தில் எனது தனிப்பட்ட அனுபவங்களை பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளத் தயக்கம் இருந்தது. ஆனால், என் பிள்ளைகளான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் ஊக்கப்படுத்தியதன் பேரிலேயே இந்தப் புத்தகத்தை எழுத ஒப்புக்கொண்டேன்.
மாமியார் இந்திரா காந்தி மற்றும் கணவர் ராஜீவ் காந்தி ஆகியோரின் மறைவு குறித்த பகுதிகளை எழுதும்போது, மிகுந்த உணர்வுப்பூர்வமான சிரமங்களை எதிர்கொண்டேன். எனது வாழ்க்கையின் ஆரம்பகால நிகழ்வுகளை எழுதுவது எளிதாக இருந்தபோதிலும், மிகுந்த வேதனை தந்த தருணங்களை மீண்டும் நினைவுகூர்ந்து எழுதுவது கடினமாக இருந்தது.
நான் ஒருபோதும் டைரி எழுதியதில்லை. அதனால் எனது வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் குறித்து எழுதுவது கூடுதல் சவாலாக இருந்தது. அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தைச் சேர்ந்த சில கையெழுத்துப் பிரதிகள் மட்டுமே என்னிடம் இருந்தது.
'பிலாங்கிங்' என்பது இந்தியாவில் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான போராட்டத்தைப் பிரதிபலிக்கும் தலைப்பு ஆகும். ராஜீவ் காந்தியைத் திருமணம் செய்துகொண்ட பிறகு, ஒரு புதிய நாடு, கலாச்சாரம் மற்றும் குடும்பச் சூழலுக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்வதில் பல சவால்களை எதிர்கொண்டேன்.
புத்தகம் முழுவதும் 'பிலாங்கிங்' என்ற சொல் மீண்டும் மீண்டும் வருகிறது. என்னைப் பொறுத்தவரை, இந்த இடத்தைச் சேர்ந்தவளாக மாற நான் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தேன் என்பதுதான் முக்கியம். அந்நியராக இருக்கும்போது, எப்போதும் யாரோ உங்களைக் கவனித்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு இருக்கும்; தவறு செய்துவிடுவோமோ என்ற அச்சமும் இருக்கும். எனவே, இந்தச் சூழலில் ஓர் அங்கமாக மாற நான் மேற்கொண்ட முயற்சிதான் இது.
இது என் விஷயத்தில் மட்டும் நடப்பதல்ல; இந்தியாவில் உள்ள பல பெண்களின் நிலை இதுதான். அவர்கள் திருமணம் செய்துகொள்ளும்போது, புதிய வாழ்க்கை முறைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 'இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும்' என்று அவர்களுக்குக் கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. இந்தியப் பெண்களுக்கும் இது மிகவும் கடினமான ஒரு விஷயம்தான்.
இந்தியாவில் எனது ஆரம்பகால நாட்கள் முற்றிலும் மாறுபட்டதாகவும், சில சமயங்களில் அதிர்ச்சியளிப்பதாகவும் இருந்தன. ஆரம்பத்தில் இந்த நாட்டையும், அதன் கலாச்சாரத்தையும் புரிந்துகொள்வதில் சிரமப்பட்டாலும், காலப்போக்கில் அவற்றை மதிக்கக் கற்றுக்கொண்டேன்” என்றார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் விஜய், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.