அகிலேஷ் யாதவ் | கோப்புப்படம் 
இந்தியா

சமூக ஊடகங்களில் ஆதரவளிக்கும் அகிலேஷ்: மம்தா பானர்ஜிக்காக பிரச்சாரம் செய்யாதது ஏன்?

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரான அகிலேஷ், மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். இவர் கடைசியாக, கடந்த ஜனவரியில் முதல்வர் மம்தாவை கொல்கத்தாவில் சந்தித்தார். ஆனால், அங்கு தேர்தல் நெருங்கியதும் சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ், மேற்கு வங்க மாநிலத்திலிருந்து விலகியே இருந்தார். மம்தா பானர்ஜிக்கு அகிலேஷின் ஆதரவு சமூக ஊடகப் பதிவுகளுடன் மட்டும் நின்றுபோனது.

அதேசமயம், அகிலேஷுடன் இண்டியா கூட்டணியில் இடம்பெற் றுள்ள பிஹாரின் முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடி கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவும், ஜார்க்கண்டின் முதல்வரான ஹேமந்த் சோரனும் திரிணமூல் காங்கிரஸ்(டிஎம்சி) வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தனர். டெல்லியின் முன்னாள் முதல்வரான அர்விந்த் கேஜ்ரிவால் கூட டிஎம்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து திரும்பினார்.

இந்த 3 தலைவர்களை விடவும் சமாஜ்வாதியின் அகிலேஷ், முதல்வர் மம்தாவுக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்பட்டார்.இந்நிலையில் அவரது செயல், வெறும் தற்செயல் நிகழ்வா அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் அரசியல் கணக்கு உள்ளதா? என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளன.

தேசிய அளவிலான இண்டியா கூட்டணிக் கட்சிகளாக இருந்தும் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் டிஎம்சி கட்சிகள் தனித்தனியாகவே தேர்தலைச் சந்தித்தன. ஆனால், இந்தமுறை 6 பொதுக் கூட்டங்களை மேற்கு வங்கத்தில் ராகுல் காந்தி நடத்தினார். இந்தக் கூட்டங்களில், மம்தா பானர்ஜி மற்றும் டிஎம்சி மீது ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

மாநிலத்தில் ஜனநாயகம் நிலவுவதற்குப் பதிலாக, டிஎம்சியின் ஆட்சியே நடைபெற்று வருவதாகக் கூட அவர் குற்றம் சாட்டினார். அகிலேஷ் யாதவ் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருக்க எடுத்த முடிவுக்கு, ராகுலின் நடவடிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடந்த மக்களவை தேர்தலில் சமாஜ்வாதியுடன் காங்கிரஸும் இணைந்து போட்டியிட்டது. இதேபோல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உ.பி.யின் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணி அமைக்கும் ஊகங்கள் நிலவுகின்றன. டிஎம்சி மீது ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், அகிலேஷ் யாதவ், மம்தாவுக்கு ஆதரவான பிரச்சாரம், உபியில் ஒரு எதிர்மறையான சூழலை உருவாக்கிவிடும் என அஞ்சிய வாய்ப்புகளும் சுட்டிக் காட்டப்படுகின்றன.

SCROLL FOR NEXT