இந்தியா

எதிர்க்கட்சிகளை தொகுதி மறுவரையறை மசோதா ‘அச்சுறுத்துவது’ ஏன்?

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்​பர் 3-ம் தேதி வரை நடை​பெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் அறிமுகமாகிறது. இந்த மசோதா மீது எதிர்கட்சிகள் அச்சம் கொள்வது ஏன் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய அரசு, தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி நிறைவேற்றத் தயாராகி வருகிறது. இந்த மசோதாவைச் சட்டமாக்க, அரசு மேலும் பல அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ளது. இருப்பினும், காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்கட்சிகள் இந்த மசோதாவைத் தொடர்ந்து எதிர்கின்றன. இதற்கு, புதிய தொகுதிகளின் எல்லைகளில் செய்யப்படும் மாற்றங்கள், 2029 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்குச் சாதகமான சூழலை உருவாக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக உள்ளது.

இதன்படி, எதிர்க்கட்சியை ஆதரிக்கும் வாக்காளர்கள் ஒரு சில தொகுதிகளில் மட்டும் பெருமளவில் குவிக்கப்படுகிறார்கள். இதனால், அந்தத் தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறலாம். ஆனால் அதேசமயம், சுற்றியுள்ள பிற தொகுதிகளில் அவர்களின் செல்வாக்கு குறைந்துவிடும். மேலும், ஒரு குறிப்பிட்ட தரப்பு வாக்காளர்கள் பல தொகுதிகளுக்கு இடையே பிரிக்கப்படுகிறார்கள்.

இதனால், ஒவ்வொரு தொகுதியிலும் அவர்கள் சிறுபான்மையாகி விடுகிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் விரும்பும் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது அவர்களுக்குக் கடினமாகிறது.

இந்த இரண்டு முறைகளிலும், வாக்காளர் பட்டியலில் இருந்து யாருடைய பெயரும் நீக்கப்பட வேண்டிய அவசியமில்லை. வாக்காளர்கள் புவியியல் ரீதியாக எவ்வாறு பிரிக்கப்படுகிறார்கள் என்பதன் மூலமே இந்தச் சாதகம் கிடைக்கிறது.

எனவே, ஒரு கட்சி தனது ஒட்டுமொத்த வாக்கு சதவீதத்தை கணிசமாக அதிகரிக்காமலேயே, அதிக எண்ணிக்கையிலான இடங்களைக் கைப்பற்ற முடியும்.

இந்த மசோதா, ஒரு கட்சியின் செல்வாக்கு மிக்க பகுதிகளை பலவீனப்படுத்தவும், தனிப்பட்ட தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கவும் வழிவகுக்கும். ஆளும் கட்சிக்குச் சாதகமான சூழலை உருவாக்க இது உதவும் என்று எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன.

மசோதா அமலான பிறகு உயர்மட்ட அமைப்பான, தொகுதி மறுவரையறை ஆணையத்திடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட உள்ளது. இந்தியாவில், தொகுதி மறுவரையறை ஆணையச் சட்டங்களின் கீழ் 1952, 1963, 1973 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் இத்தகைய ஆணையங்கள் அமைக்கப்பட்டன.

இந்த ஆணையத்தின் உத்தரவுகள் சட்டத்துக்கு இணையான அந்தஸ்தைக் கொண்டுள்ளன. இவற்றை எதிர்த்து யாரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது.

குடியரசுத் தலைவர் நிர்ணயிக்கும் தேதியிலிருந்து இவை நடைமுறைக்கு வருகின்றன. இந்த உத்தரவுகளின் நகல்கள் நாடாளுமன்றத்திலும், சம்பந்தப்பட்ட மாநிலச் சட்டப்பேரவைகளிலும் சமர்ப்பிக்கப்படுகின்றன.

ஆனால், இந்த அவைகளுக்கு அந்த உத்தரவுகளில் திருத்தம் செய்யும் அதிகாரம் இல்லை. எனவே, இந்த ஆணையத்தின் கட்டமைப்பு, அதன் சுதந்திரமான செயல்பாடு மற்றும் அதன் செயல்பாட்டு முறை ஆகியவை தற்போதைய விவாதத்தின் மையப் புள்ளிகளாக உள்ளன.

இந்தச் செயல்முறை நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்றும், ஆளும் கட்சிக்குச் சாதகமாகத் தொகுதி எல்லைகள் வரையப்படக்கூடாது என்றும் எதிர்க்கட்சிகள் உறுதிமொழி கோருகின்றன.

மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, 2029 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக தனது சொந்த நலனுக்காக இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்றியமைக்க முயல்வதாகக் குற்றஞ்சாட்டியது நினைவுகூரத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT