புதுடெல்லி: புதிய வாக்காளர்களை இணைப்பதற்கான படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் சட்டவிரோதமானது என்று குற்றம் சாட்டியுள்ள ராகுல் காந்தி, ‘இந்த மாற்றத்தைச் செய்ய டிசிஎஸ் நிறுவனத்துக்கு தேர்தல ஆணையத்தில் யார் உத்தரவிட்டார்கள்?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இணையவழி படிவம் 6 சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையர்களே பதிவு செய்துள்ளனர். இந்த மாற்றத்தைச் செய்ய டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையத்தில் யார் உத்தரவிட்டது?
டிசிஎஸ் நிறுவனத்தில் யார் அதற்கு ஒப்புதல் அளித்தது? அதோடு, அதைச் செய்ய அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்தப் பதிவை டேக் செய்து காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘வாக்காளர் பட்டியலில் இருந்து ஜென்ஸீ தலைமுறை வாக்காளர்களை நீக்குவதற்காக இந்த ஆண்டு ஜூலை மாத மத்தியில் படிவம் 6-ல் மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அரசியலமைப்புக்கு முரணாக, தலைமைத் தேர்தல் ஆணையரால் இது நிகழ்த்தப்பட்டது. இந்த நடவடிக்கை, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகிய இருவரால் திட்டமிடப்பட்டது’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் ஆன்லைன் படிவம் 6-ல் சேர்க்கப்பட்டிருந்த கூடுதல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆர்) உறுதிமொழிப் பிரிவை தேர்தல்ஆணையம் நீக்கியுள்ளது.
எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த மாற்றம் உடனே அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், அங்கு புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள், 1960-ம் ஆண்டின் வாக்காளர்கள் பதிவு விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட ‘படிவம் 6’-ஐ மட்டும் இனி சமர்ப்பித்தால் போதுமானது என்பது கவனிக்கத்தக்கது.
தேர்தல் ஆணையத்தின் டிஜிட்டல் இணையதளம் மற்றும் அதன் உள்கட்டமைப்பை நிர்வகிக்கும் தொழில்நுட்ப சேவை நிறுவனமாக டிசிஎஸ் செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்துக்கான மின்னணு வாக்காளர் பதிவு மற்றும் விண்ணப்பச் செயல்முறைகளைக் கையாளும் 'ECINET' என்ற டிஜிட்டல் இணையதளத்தை டிசிஎஸ் நிர்வகிக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் நிர்வாக ரீதியிலான அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த இணையதளத்தில் டிசிஎஸ் தொழில்நுட்ப மாற்றங்களை மேற்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.