சிவசாகர் மாவட்டத்தில் தனது பேரனை பத்திரமாக அழைத்துச் செல்லும் தாத்தா
குவாஹாட்டி: அசாம் மாநிலத்தின் சிவசாகர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. இந்த வெள்ளத்தால் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
கோல்பாரா, காக்சார், லக்கிம்பூர், தீமாஜி, திப்ருகர், ஜோர்ஹட், பிஸ்வநாத், சாராய்தியோ, நல்பாரி, பஜாலி, சிராங், கோக்ரஜார், பொங்கைகோன், பக்சா, சிவசாகர், தர்ரங், சோனித்பூர், தின்சுகியா, உதல்குரி, கோலாகாட், நாகோன், கர்பி அங்லோங், கம்ருப், ஹோஜாய் உள்ளிட்ட 25 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 600-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மழை வெள்ளத்தால் 11 லட்சத்து 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “11 லட்சத்து 44 ஆயிரத்து 733 பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசு சார்பில் 215 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 71 ஆயிரத்து 223 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அசாமில் பருவ மழை தீவிரமடைந்ததை அடுத்து, மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மழை, வெள்ளம் காரணமாக இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5.65 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு வசதியாக மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சிவசாகர் மாவட்டத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். சாராய்தியோ மாவட்டத்தில் 20 பேரும், ஜோர்ஹட்டில் 9 பேரும், தீமாஜி மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். 8 பேர் காணாமல் போயுள்ளனர். இதில், சிவசாகர் மாவட்டத்தில் 7 பேரும், தீமாஜி மாவட்டத்தில் ஒருவரும் காணாமல் போயுள்ளனர்.
வெள்ளப்பெருக்கால் 1,180 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 9 ஆயிரத்து 926 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. வீடுகளில் இருந்து 29 ஆயிரத்து 983 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.
37,139 ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சுமார் 2.56 லட்சம் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 26 ஆயிரத்துக்கும் அதிகமான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இதனிடையே, அசாம் எம்.பி.க்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வெள்ள நிலைமை குறித்து கலந்துரையாடினேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதில் மத்திய அரசு, அசாம் மாநில அரசுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பதிவுக்கு நன்றி தெரிவித்து ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்டுள்ள பதிவில், “பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களையும் எங்களால் சென்றடைய முடிந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட அனைவரும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி உள்ளிட்டவை செய்து தரப்படுகின்றன.
இந்த இக்கட்டான சூழலில் விரைவான நடவடிக்கைகளை உறுதி செய்ய நாங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கான விரிவான மறுவாழ்வு திட்டத்தை நாங்கள் முன்வைப்போம். நிலைமையை தொடர்ந்து கண்காணித்து எங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதற்காக உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.