புதுடெல்லி: மாநிலங்களவை விதி 267-ன் வரம்புகள் குறித்து அவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று விரிவான விளக்கம் அளித்தார்.
மாநிலங்களவை விதி 267-ன் கீழ் எம்பிக்கள் அவையில் ஒரு தீர்மானத்தை முன்மொழியலாம். இந்த விதியின் கீழ் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அன்றைய தினம் மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு குறிப்பிட்ட தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படும். எனினும் இந்த விதியை அமல்படுத்த மாநிலங்களவைத் தலைவரின் ஒப்புதல் அவசியமாகும்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடத்தக் கோரி விதி 267-ன் கீழ் 21 நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டன. இந்த நோட்டீஸ்களை மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த 2-ம் தேதி நிராகரித்தார். இதற்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜு கார்கே கடும் ஆட்சேபம் தெரிவித்தார். விதி 267 விவகாரம் மாநிலங்களவையில் நேற்றும் எதிரொலித்தது. அப்போது இந்த விதியின் வரம்புகள் குறித்து அவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
மாநிலங்களவை விதி 267, கடந்த 2000-ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது. அப்போதைய மாநிலங்களவைத் தலைவர் கிருஷ்ணன் காந்த், உறுப்பினர்கள் மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு, பாலி எஸ். நாரிமன் ஆகியோர் அடங்கிய குழு விதி 267-ல் மாற்றங்களை செய்தது.
அப்போது இந்த விதியை யாரும் தவறாக பயன்படுத்தாமல் இருக்க தேவையான அம்சங்கள் சேர்க்கப்பட்டன. இதன்படி மாநிலங்களவையில் ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட விவகாரங்கள் குறித்து மட்டுமே விதி 267-ன் கீழ் விவாதம் நடத்த முடியும். இதர விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த முடியாது. தற்போதைய சூழலில் மாநிலங்களவை அலுவல்களை முடக்க விதி 267-ன் கீழ் தினமும் நோட்டீஸ்கள் வழங்கப்படுகின்றன. இது தவறான அணுகுமுறை ஆகும்.
மிகவும் அரிதான விவகாரங்கள் தொடர்பாக மட்டுமே விதி 267-ஐ பயன்படுத்த வேண்டும். கடந்த 1988 முதல் 2000 வரையிலான காலத்தில் இந்த விதிப்படி 3 நோட்டீஸ்கள் மட்டுமே ஏற்கப்பட்டன. கடந்த 2000-ம் ஆண்டுக்குப் பிறகு 267-வது விதியின் கீழ் 8 விவகாரங்கள் மட்டுமே ஒருமித்த கருத்துடன் ஏற்கப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விதி 267 தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது.