கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு இறுதிக் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. 142 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் 142 தொகுதிகளில் இன்று (ஏப்.29) வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், மீதம் உள்ள 142 தொகுதிகளில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதிகள் கொல்கத்தா வடக்கு, கொல்கத்தா தெற்கு, ஹவுரா, நாடியா, வடக்கு 24 பர்கானாஸ், தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி மற்றும் புர்தா பர்தாமன் ஆகிய 8 மாவட்டங்களில் அமைந்துள்ளன.
இதனிடையே, இந்த 142 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவு பெற்றது. இதனால் திரிணமூல் காங்கிரஸ், பாஜகவைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். முதல்வர் மம்தா பானர்ஜி தனது சொந்த தொகுதியான பவானிப்பூரில் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார்.
பிரதமர் மோடி பிரச்சாரம்: இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி ஜகத்தால் பகுதியில் ஜிலேபி மத் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வாக்கு வேட்டையாடினார்.
142 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநில போலீஸார் மட்டுமல்லாமல் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று காலை முதல் தேர்தல் அலுவலர்கள் தங்களுக்குத் தேவையான வாக்குச்சாவடி பொருட்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களுடன் தங்களது வாக்குச்சாவடிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவிடாது வாக்குப்பதிவு நடைபெறும். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸார், துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
3.23 கோடி வாக்காளர்கள்:
இந்த இறுதிக் கட்டத் தேர்தலில் மொத்தம் 3.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 1.64 கோடி பேர் ஆண்கள், 1.57 கோடி பேர் பெண்கள். 792 பேர் மூன்றாம் பாலினத்தவர். தேர்தலுக்காக 41,001 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,448 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் உள்ளனர்.