கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நாளை மறுதினம் (ஏப்.29) நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக கடந்த 23-ம் தேதி 152 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. முதல்கட்ட தேர்தலில் 93.19 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நாளை மறுதினம் (ஏப்.29) நடைபெற உள்ளது. இந்நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது.
முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி (டிஎம்சி) தொடர்ந்து 3-வது முறையாக மேற்கு வங்கத்தை ஆள்கிறது. மேற்கு வங்கத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது.
இம்முறை மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, பாஜக, இடது முன்னணி கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி தனித்தனியாக போட்டியிடுகின்றன. நான்கு முனைப்போட்டி நிலவினாலும், திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.