இந்தியா

மேற்கு வங்கத்தில் 77 முஸ்லிம் சமூகங்கள் ஓபிசி பட்டியலிலிருந்து நீக்கம்: இடஒதுக்கீடு 7% ஆக குறைப்பு

டெக்ஸ்டர்

கொல்கத்தா: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான இரண்டு முக்கிய மசோதாக்கள் மேற்கு வங்க சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நிறைவேறியுள்ளது. இதன் மூலம், முந்தைய திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்ட 77 முஸ்லிம் சமூகங்கள் அந்தப் பட்டியலிலிருந்து அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டுள்ளன. மேலும், ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு அளவு 10 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 மே மாதம் கொல்கத்தா உயர் நீதிமன்றம், 2011-க்குப் பிறகு ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்ட பல சமூகங்களின் இடஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது. தேர்தலில் வாக்கு வங்கிக்காக முஸ்லிம் சமூகங்கள் அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அப்போது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தது. 

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதன்முறையாக மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதும், முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசு கடந்த மே 18 அன்று இதற்கான அரசாணையை வெளியிட்டது. இந்த நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கவுரி சங்கர் கோஷ் இந்த மசோதாக்களை பேரவையில் அறிமுகப்படுத்தினார். சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாக்களுக்கு ஆதரவாக 186 எம்எல்ஏ-க்களும், எதிராக 17 எம்எல்ஏ-க்களும் வாக்களித்தனர்.

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கவுரிசங்கர் கோஷ், “முந்தைய அரசு, முஸ்லிம்களுக்கு முறையற்ற சலுகைகளை வழங்குவதற்காக எந்தவொரு முறையான கணக்கெடுப்பும் நடத்தாமல் பல சமூகங்களை ஓபிசி பட்டியலில் சேர்த்திருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி அவை தற்போது நீக்கப்பட்டுள்ளன. முறையான கணக்கெடுப்புக்குப் பின் சேர்க்கப்பட்ட 66 சமூகங்கள் மட்டுமே தற்போது ஓபிசி பட்டியலில் தக்கவைக்கப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் போலி ஓபிசி சான்றிதழ்கள் வழங்கப்படுவதை இந்த மசோதாக்கள் முற்றிலும் தடுக்கும்" என்று கூறினார். 

மேலும், உண்மையான ஓபிசி நிலவரம் குறித்து மேற்கு வங்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விரைவில் புதிய கணக்கெடுப்பை நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். புதிய அறிவிப்பின்படி ஜோலா, ஃபகிர், பஹாடியா முஸ்லிம், ஹஜ்ஜாம் மற்றும் சவுதுலி போன்ற குறிப்பிட்ட சில முஸ்லிம் சமூகங்கள் மட்டுமே ஓபிசி பட்டியலில் நீடிக்கின்றன. அதேநேரம் நெஹாரியா, ஹல்தார், சான்புய், மாலி, கோசி, தர்ஜி மற்றும் மொல்லா உள்ளிட்ட 77 முஸ்லிம் பிரிவுகள் பட்டியலிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT