மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ராகவ் சத்தா உள்ளிட்ட 7 மாநிலங்களவை உறுப்பினர்களை வரவேற்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று தெரிவித்தார்.
இது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ”ராகவ் சத்தா உள்ளிட்ட 7 எம்.பி.க்கள் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி, பாஜவுடன் இணைவதை மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்றுக்கொண்டார்.
இப்போது, ராகவ் சத்தா, சந்தீப் பதக், அசோக் மிட்டல், ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால், ரஜிந்தர் குப்தா மற்றும் விக்ரம்ஜித் சிங் சாஹ்னி ஆகியோர் பாஜக உறுப்பினர்களாக உள்ளனர். நீண்ட காலமாக நான் கவனித்த வகையில், இந்த 7 எம்.பி.க்களும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை, ஒருபோதும் ஒழுக்கமின்மையையோ அல்லது நாடாளுமன்றத்துக்குப் புறம்பான நடத்தையையோ வெளிப்படுத்தியதில்லை.
‘துக்கடே-துக்கடே' ‘இண்டி' கூட்டணிக்கு விடைகொடுத்துவிட்டு, பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் தேசத்தைக் கட்டியெழுப்பும் என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள உங்களை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.