இந்தியா

“தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை ஜந்தர் மந்தரை விட்டு வெளியேற மாட்டோம்” - சிஜேபி தலைவர்

டெல்லியில் போராட்டம் தீவிரம்

வெற்றி மயிலோன்

புதுடெல்லி: “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை ஜந்தர் மந்தரில் இருந்து வெளியேறப் போவதில்லை” என்று காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார். மேலும், போராட்டத்தைத் தொடர அனுமதி வழங்குமாறு டெல்லி காவல் துறையிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஜந்தர் மந்தரில் ஏற்பாடு செய்திருந்த இரண்டாவது போராட்டக் கூட்டத்தில் கூடியிருந்த மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அபிஜித் தீப்கே, "நாடு முழுவதிலுமிருந்து இளைஞர்கள் இங்கு வந்துள்ளதால், அதிகாரிகளிடம் நான் ஒரு கோரிக்கை விடுக்கிறேன்.

நீதி கிடைக்கும் வரை அவர்கள் இங்கேயே அமர்ந்திருக்க விரும்புகிறார்கள். எனவே, எங்கள் போராட்டத்துக்கான அனுமதியை நீட்டிக்குமாறு காவல் துறையைக் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் போராட்டம் அமைதியான முறையில் நடைபெறுகிறது. நாங்கள் வெறும் அப்பாவி மாணவர்கள் மட்டுமே, அமைதியாக இங்கே அமர்ந்திருக்க விரும்புகிறோம்.

பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருக்கிறது. ஆனால், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது மட்டுமே ஒரே நிபந்தனை. கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், நானே முதலில் முன்வந்து கைதாகுவேன்” என்றார்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவின் அழைப்பை ஏற்று, அவரது ஆதரவாளர்கள் தட்டுகள் மற்றும் கரண்டிகள் ஆகியவற்றை இன்றைய போராட்டத்தின் அடையாளங்களாகக் கொண்டு வந்து, அவற்றை தட்டி ஒலி எழுப்பி முழக்கமிட்டனர். அப்போது,"தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்" என்ற முழக்கங்கள் எல்லா இடங்களிலும் எதிரொலித்தன.

SCROLL FOR NEXT