புது டெல்லி: மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்த அரசு விடுத்த அழைப்பை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிர்வாகி சவுரவ் தாஸ் நிராகரித்தார். மேலும், “இனி எந்த ஒரு பேச்சுவார்த்தையும் ஜந்தர் மந்தரில் உள்ள மக்கள் மன்றத்தில் மட்டுமே நடைபெறும்” என்று அவர் தெரிவித்தார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் செய்தியாளர்களிடம் சவுரவ் தாஸ், கூறும்போது, "மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா எங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்காக அவரின் வீட்டுக்கு அழைத்தார். நாங்கள் அதைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டோம். மக்கள் மன்றம் இங்குதான் உள்ளது. எனவே, அமைச்சர்கள் இங்கே மக்கள் மத்தியில் வர வேண்டும்.
நாங்கள் படித்தவர்கள் என்பதால், அமைச்சர்களுக்கு ஏதேனும் பாதுகாப்புச் சிக்கல்கள் இருந்தால் ஜந்தர் மந்தருக்கு அருகிலுள்ள ஏதேனும் ஒரு பொதுவான இடத்தில் சந்திக்கலாம் என்று நினைத்தோம். அது குறித்து அவர்களிடம் இருந்து இன்னும் எந்தப் பதிலும் வரவில்லை.
கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கான எண்ணம் அரசுக்கு இருப்பது முக்கியம். அப்போதுதான் அவர்கள் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். பயனற்ற பேச்சுவார்த்தைகளுக்கு எங்களிடம் நேரமில்லை. நேரம் மிகவும் மதிப்புமிக்கது. ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் இங்கே முகாமிட்டுள்ளனர். போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது, அதையும் நாங்கள் நிர்வகிக்க வேண்டியுள்ளது.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மூன்று முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளோம். முதலாவதாக, தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். இரண்டாவதாக, நீட் வினாத்தாள் கசிவு காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
சவுரப் தாஸ் |கோப்புப் படம்
மூன்றாவதாக, அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது தேவையற்ற முறையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் திரும்பப் பெறப்பட வேண்டும்.
மேலும், இந்தப் போராட்டம் தொடர்பாக எதிர்காலத்தில் எவர் மீதும் இதுபோன்ற வழக்குகள் பதிவு செய்யப்படாது என்பதற்கான உறுதியான உத்தரவாதத்தை அரசு அளிக்க வேண்டும்.
ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. இந்தப் போராட்டத்திலும் வன்முறைக்கு இடமில்லை. அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் அதை நிறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். காவல் துறையினரிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளாதீர்கள்.
நமது முக்கிய நோக்கத்திலிருந்து விலகிச் செல்லாதீர்கள். நீங்கள் வன்முறையிலோ அல்லது பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவதிலோ ஈடுபட்டால், போராட்டத்தின் ஒட்டுமொத்தப் போக்கும் மாறிவிடும். இது காந்தியடிகளின் பூமி, காந்தியக் கொள்கைகளின் வழியே நாம் முன்னேறி வெற்றி பெறுவோம்.
இந்தப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் நிலை குறித்த விவரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்குமாறு காவல் துறையிடம் கேட்டுள்ளோம். எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர், அவர்கள் எங்கே இருக்கிறார்கள், தற்போது எத்தனை பேர் காவலில் உள்ளனர் என்பது குறித்த விவரங்களை காவல் துறை பொதுவெளியில் வெளியிட வேண்டும்” என்று கூறினார்.