சண்டிகர்: பஞ்சாபில் பாஜக நடத்திய 'போதையற்ற பஞ்சாப் யாத்திரை' நிறைவு விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2029 டிசம்பருக்கு முன்பாக பஞ்சாப்பை போதைப்பொருள் பிடியிலிருந்து விடுவிப்போம் என்று உறுதி அளித்தார். மேலும், ஆம் ஆத்மி அரசை பேரிடர் என விமர்சித்த அவர், போதையற்ற பஞ்சாப் என்ற முழக்கத்தோடு பாஜக தேர்தலைச் சந்திக்கும் என்றார்.
செப்டம்பர் 18-ல் நான்கு திசைகளிலிருந்து தொடங்கிய 13 நாள் யாத்திரை, சுமார் 4,000 கி.மீ. தூரம் கடந்து, கடந்த செவ்வாய்க்கிழமை ஜலந்தரை அடைந்தது. நேற்று நிறைவு விழா பேரணி நடைபெற்றது. ஜலந்தர் பராகர்பூர் கிராமத்தில் 60 ஏக்கரில் நடைபெற்ற இப்பேரணியில் லட்சக்கணக்கான மக்கள், போதையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
இந்திய கடலோரக் காவல்படையும் குஜராத் தீவிரவாதத் தடுப்புப் படையும் இணைந்து, லட்சத்தீவு அருகே கடந்த 25-ம் தேதி மேற்கு அரபிக் கடலில் வந்து கொண்டிருந்த சந்தேகத்துக்கிடமான படகை மடக்கி சோதனை நடத்தினர்.
ஈரான் நாட்டைச் சேர்ந்த அந்தப் படகில் இருந்து சுமார் 526 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தக் கப்பலை இயக்கிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.3,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.