டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும் பிரசாந்த் பூஷண்
புதுடெல்லி: “நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதில் தவறேதும் இல்லை. ஆட்சி மாற்றம் என்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக உரிமை” என்று சிஜேபி ஆதரவாளரும், மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி சிஜேபி மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்பான ஏஐஎஸ்ஏ உள்ளிட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து போராடி வருகின்றன. இந்த அமைப்புகள் சார்பில் டெல்லியில் நாளை மூவர்ணக்கொடி போராட்டம் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு இந்த அமைப்பினர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, ஏஐஎஸ்ஏ தலைவர் நேஹா போரா, நடிகர் பிரகாஷ் ராஜ், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது பேசிய பிரசாந்த் பூஷண், “நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. நாங்கள் இந்த நாட்டில் தேர்தல் ஜனநாயகத்தைக் காக்கவே வேண்டுகோள் விடுக்கிறோம்.
மத்திய அரசின் இத்தகைய காட்டுமிராண்டித்தனம் தொடர்ந்தால், நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும். நாங்கள் அனைவரும் ஆட்சி மாற்றத்தையே விரும்புகிறோம். இதில் என்ன தவறு உள்ளது? ஆட்சி மாற்றம் என்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக உரிமை. அரசாங்கத்தின் மீது அதிருப்தியை உருவாக்குவது குற்றமல்ல.
நாட்டில் தேர்தல் ஜனநாயகத்தை நசுக்குவதிலும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளுடன் விளையாடுவதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஒரு அரசாங்கம் நீடிக்க முடியாது” என்று தெரிவித்தார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, “ஜந்தர் மந்தரில் மூவர்ணக் கொடியை அசைத்ததை குற்றம் என நரேந்திர மோடி அரசு கூறுகிறது. யாருக்காக... ஞானேஷ் குமாருக்காக.
மாணவர்கள், எதிர்க்கட்சிகள், முன்னாள் முதல்வர்கள் என பலரும் வீதிகளில் போராடுகிறார்கள். இந்த போராட்டங்களை ஒடுக்க டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் ரயில்வேயை மூடி, மெட்ரோவை மூடி, டெல்லியை எல்லையாக மாற்றி உள்ளது மோடி அரசு. யாருக்காக, ஞானேஷ் குமாருக்காக.
நரேந்திர மோடிக்கு ஞானேஷ் குமார் ஏன் முக்கியமானவராகிறார்? ஏனெனில், நரேந்திர மோடி தேர்தலில் வெற்றிபெற ஞானேஷ் குமார் உதவுகிறார். இதை நாம் நம்பக்கூடாதா? மோடி தேர்தலில் வெற்றிபெற உதவவில்லை என்றால் அவர் ஏன் ஞானேஷ் குமாருக்கு இவ்வளவு பாதுகாப்பு கொடுக்கப் போகிறார்?” என கேள்வி எழுப்பினார்.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.