கொல்கத்தா: “நாங்கள் தோற்கவில்லை; எங்கள் வெற்றி களவாடப்பட்டது. நான் ராஜினாமா செய்யப் போவதில்லை” என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்க அரசியலில் வரலாற்றில் தாமரை வளர்ந்த வெற்றிக் களிப்பில் பாஜகவினர் இருக்கின்றனர்.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரான மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “நாங்கள் தோற்கவில்லை; எங்கள் வெற்றி களவாடப்பட்டது” என்றார்.
மம்தா பானர்ஜி மேலும் பேசுகையில், “நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை. நாங்கள் இந்தத் தேர்தலில் தோற்கவில்லை; மாறாக எங்கள் வெற்றி களவாடப்பட்டது. நான் ராஜினாமா செய்யப் போவதில்லை. அடுத்தக்கட்ட நகர்வு குறித்து எனது கட்சியினர் ஒன்றுகூடி ஒருமித்த முடிவை எட்டுவோம்.
தேர்தலில் பெரியளவில் வன்முறை நடந்துள்ளது. காவல்துறை, தேர்தல் ஆணையம் என அமைப்பு ரீதியிலான தாக்குதல்கள் நடந்துள்ளன.
இந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தார்மிக வெற்றி பெற்றிருக்கிறது. எங்களுடைய போட்டி பாஜகவுக்கு எதிரானது அல்ல. அது தேர்தல் ஆணையத்துக்கு எதிரானது. இந்தத் தேர்தலில் அவர்கள் நியாயமான வெற்றியைப் பெற்றிருப்பார்கள் என்றால் நான் புலம்பியிருக்க மாட்டேன்.
வாக்காளர் பட்டியலிலேயே அவர்கள் குளறுபடிகளை ஆரம்பித்துவிட்டனர். 90 லட்சம் வாக்காளர்கள் பெயர்களை நீக்கியிருந்தனர். நாங்கள் நீதிமன்றம் சென்று 32 லட்சம் வாக்காளர்கள் பெயரை மீட்டெடுத்தோம். அதன் பின்னர் 7 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் இணைக்கப்பட்டன. அது எப்படி என்று இதுவரை யாருக்கும் தெரியாது.
நான் என் வாழ்நாளில் இத்தகைய தேர்தலை சந்தித்ததில்லை. 2004-க்குப் பின்னர் இதுபோன்ற அராஜகங்களைப் பார்த்ததும் இல்லை.
வாக்கு எண்ணிக்கையின் போது பரவலாக வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. முதல் சுற்று முடிவிலேயே ஊடகங்கள் பல பாஜக இத்தனை இடங்களைப் பெறக்கூடும் என்று கூறின. அதன் பின்னர் வாக்குச்சாவடிகளை பாஜக கைக்குள் கொண்டு வந்தது.
காவல் துறையும், மத்தியப் படைகளும் எந்த வன்முறைகளையும் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரை துன்புறுத்தினர். எங்கள் கட்சிப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். மத்தியப் படைகள் இப்படி செயல்படுவதை நான் இதுவரை பார்த்ததில்லை.
அவர்கள் என்னையும் சுதந்திரமாக நடமாடவிடவில்லை. என்னை அடிவயிற்றிலும், பின்புறத்திலும் எட்டி உதைத்தனர். என்னை வாக்கு எண்ணும் மையத்திலிருந்து தூக்கி வீசினர். ஒரு பெண்ணான என்னிடம் அவர்கள் தகாத முறையில் நடந்து கொண்டனர். ஆனால் இதைப் பற்றியெல்லாம் நாங்கள் யாரிடம் புகார் செய்வோம். எல்லா அமைப்புகளும் பாஜகவால் விலைக்கு வாங்கப்பட்டுவிட்டன.
ஆனாலும், இந்தத் தோல்வியிலிருந்து நாங்கள் மீண்டெழுவோம். நாங்கள் புலியைப் போல் போராடினோம்; இனியும் போராடுவோம். எனக்கு நாற்காலிகள் பற்றி கவலையில்லை. எனக்கு மக்கள் மீதுதான் அக்கறை.
இண்டியா கூட்டணித் தலைவர்கள் தேர்தல் முடிவுக்குப் பின்னர் என்னுடன் பேசினர். சோனியா காந்தி, ராகுல் காந்தி, அரவிந்த் கேஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, ஹேமந்த் சோரன், தேஜஸ்வி யாதவ் என்னை அழைத்தனர். அவர்கள் எல்லோரும் என்னை ஆதரிக்கின்றனர். அகிலேஷ் யாதவ் நாளை வருகிறார். பின்னர் ஒவ்வொருவராக எனைக் காண வருவார்கள்.
இனிமேல் எனது கவனம் இண்டியா கூட்டணியை வலிமைப்படுத்துவதில் தான் இருக்கும். இப்போது எனக்கு முதல்வர் நாற்காலி கட்டுப்பாடுகள் இல்லை. நான் இனி ஒரு சாமானியர். சுதந்திரப் பறவை.
தேர்தல் வன்முறைகள், குளறுபடிகள் குறித்து ஆராய உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்துள்ளேன். 10 பேர் கொண்ட இந்தக் குழு, வன்முறை நடந்த இடங்களுக்கு எல்லாம் சென்று ஆய்வு செய்யும்.
ஆனால் பாஜகவுக்கு ஒரு விஷயத்தை எச்சரிக்கையாக சொல்ல விரும்புகிறேன். நீங்கள் மத்தியில் அதிகாரத்தில் இல்லாத போது இதே மாதிரியான நிலைமையை எதிர்கொள்ள நேரிடும்.
உங்களது தேவையெல்லாம் நாடு முழுவதும் ஒற்றைக் கட்சி ஆட்சி. எதிர்க்கட்சியே இருக்கக் கூடாது என்று நினைக்கிறீர்கள். இதுவே தொடர்ந்தால் உங்களது பிம்பம் உடைபடும். ஜனநாயகத்தின் மாண்பை மறந்துவிட்டீர்கள்” என்றார் மம்தா பானர்ஜி.