புதுடெல்லி: ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முகேஷ் அம்பானிதான் ‘இந்தியாவின் நிஜ பாஸா?’ என்று கேள்வி எழுப்பிய உலகப் பெரும் பணக்காரர் எலான் மஸ்க்கின் கருத்து கடும் கண்டனத்துக்குரியது. நாங்கள் எப்போதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானவர்கள்தான். ஆனால் ஒரு வெளிநாட்டவர் (அமெரிக்கர்) எவ்வாறு நம் பிரதமரைப் பற்றி இத்தகைய கருத்துக்களை எழுத முடியும்? நாட்டின் வளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நமது நாடுதான் தீர்மானிக்கும்.
இந்த வெள்ளையர் எங்கோ உட்கார்ந்து கொண்டு நமக்கு உத்தரவிடுவாரா? ஒரு வெளிநாட்டுத் தொழிலதிபர் நமது நாட்டின் முடிவெடுக்கும் அதிகாரத்தைச் சவாலுக்கு உட்படுத்தும்போது, தேசியவாதம் பற்றி எப்போதும் பேசும் பாஜகவும் மோடி அரசும் ஏன் மவுனமாக உள்ளது?
இந்திய ஊழியர்கள் மற்றும் குடிமக்களின் நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஒரு வெளிநாட்டவரின் நலனுக்காக இந்தியர்களின் நலனைப் பலி கொடுக்கக் கூடாது. சொந்த நாட்டில் அரசைக் கண்டிப்பதற்கும், ஒரு வெளிநாட்டு தொழிலதிபர் நமது நாட்டுக்கு நிபந்தனைகளை விதிக்க அனுமதிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இவ்வாறு ஒவைசி தெரிவித்தார்.