ஜெய்ப்பூர்: நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக ராஜஸ்தான், கேரளாவில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 22.80 லட்சம் மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுதினர். இந்த சூழலில் ராஜஸ்தானின் சிகார் நகரில் நீட் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இதன்பேரில் ராஜஸ்தான் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி சிகார், ஜுன்ஜுனு மற்றும் உத்தராகண்ட் தலைநகர் டேராடூனை சேர்ந்த 13 பேரை கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ராஜஸ்தான் போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: நீட் நுழைவுத் தேர்வுக்கு முன்பாக ராஜஸ்தானின் சிகார் பகுதியில் சமூக வலைதளங்கள் வாயிலாக கையால் எழுதப்பட்ட மாதிரி வினாத்தாள் வெளியாகி உள்ளது. இந்த வினாத்தாளில் இடம்பெற்றிருந்த 135 கேள்விகள், நீட் வினாத்தாளுடன் ஒத்துப் போகின்றன. அதாவது உயிரியல், தாவரவியல் வேதியியல் பாடங்களின் தலா 45 கேள்விகளும் நீட்வினாத்தாளில் அப்படியே இடம்பெற்று உள்ளன.
மாதிரி வினாத்தாள்கள் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சமூக வலைதளங்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். ராஜஸ்தானின் சிகார் பகுதியை சேர்ந்த ஒரு மாணவர், கேரளாவில் உள்ள கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். அந்த மாணவரே, சிகார் பகுதியில் உள்ள நீட் பயிற்சி மையத்துக்கு மாதிரி வினாத்தாளை அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
தேசிய தேர்வு முகமை விளக்கம்
இதுதொடர்பாக ராஜஸ்தானின் சிறப்புப் படை கேரளாவுக்கு விரைந்துள்ளது. கேரளாவிலும் நீட் வினாத்தாள் கசிந்திருக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக கேரள போலீஸாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் குறித்து நீட் நுழைவுத் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மே 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வின்போது பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்பட்டன. ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட சிறப்பு வாகனங்களில் வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன்கூடிய சிசிடிவி கேமராக்கள் மூலம் தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டன.
மாணவ, மாணவியரின் பயோமெட்ரிக் தகவல்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டன. தேர்வு மையங்களில் 5ஜி ஜாமர்கள் பயன்படுத்தப்பட்டன. கடந்த மே 7-ம் தேதி நீட் வினாத்தாள் விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸார் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் மத்திய கல்வித் துறையுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நேர்மையான முறையில் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை (என்டிஏ) உறுதிபூண்டு இருக்கிறது. போலீஸாரின் விசாரணைக்கு என்டிஏ முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இவ்வாறு என்டிஏ தெரிவித்துள்ளது.