புதுடெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் ஹரியானாவின் அல் பலா பல்கலைக்கழகத்துக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அல் பலா பல்கலைக்கழகத்துக்கு நீண்ட காலமாகவே தீவிரவாத தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு ஜெய்ப்பூர், அகமதாபாத், டெல்லி, கோரக்பூரில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய மிர்ஸா ஷதாப் பெய்க், அல் பலா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2007-ம் ஆண்டு அந்த பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்வி நிறுவனத்தில் பி.டெக்.(எலக்ட்ரானிக்ஸ்) படிப்பை முடித்துள்ளார்.
இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவரான இவர், இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு தலைமறைவானார். இதையடுத்து, அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இப்போது அவர் சவுதி அரேபியாவில் வசித்து வருவது தெரியவந்துள்ளது.