இந்தியா

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டமா? - கே.சி.வேணுகோபால் பதில்

மோகன் கணபதி

புதுடெல்லி: சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், நடவடிக்கை குறித்து அறிந்து கொள்ள காத்திருங்கள் என்று கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற வியூகம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் அமைப்பு அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.சி. வேணுகோபால், ‘‘நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் (செய்தியாளர்கள்) பார்க்கிறீர்கள். இந்த அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எதையும் பேச அனுமதிக்கப்படவில்லை.

          

ஆளும் தரப்பினர் எதை வேண்டுமானாலும் பேசலாம். அவர்கள் யாரையும் தாக்கி பேசலாம். உயிருடன் இல்லாதவர்களுக்கு எதிராகக் கூட இழிவான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு இந்த அவையில் சிறிதும் இடமில்லை. மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் சரி, பிற கட்சிகளின் தலைவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் பேச அனுமதிக்கப்படுவதில்லை. எதிர்க்கட்சிகள் மீதான இந்த வகையான அணுகுமுறை, இதற்கு முன்பு எந்த காலத்திலும் இருந்தது இல்லை’’ என தெரிவித்தார்.

அப்போது, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கே.சி. வேணுகோபால், “இது தொடர்பாக வெளியாகும் செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள காத்திருங்கள்” என தெரிவித்தார்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் பேச இருந்தார். பிரதமர் அவைக்கு வரும்போது அவர் மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் பெண் எம்பிக்கள் திட்டமிட்டிருப்பதாக தனக்கு நம்பகமான தகவல் வந்ததாகக் கூறி பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார். இதனால், பிரதமரின் உரை இல்லாமலேயே மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனினும், ஓம் பிர்லாவின் இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்த காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி, ‘‘பிரதமரை தாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறுவது முழுக்க முழுக்க பொய். பிரதமர் மோடி, சபாநாயகருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்’’ என குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT