ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சி எழுப்பும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுக்கும், இண்டியா கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச முதல்வருமான உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
தேர்தல்களில் பாஜக வாக்குகளை திருடுவதாகவும், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கு துணை போவதாகவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் இது குறித்து பேசினர். வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள் என்ற முழக்கம் இந்தக் கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் முன்வைக்கும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் இன்று உமர் அப்துல்லாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ‘‘இண்டியா கூட்டணிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதன் சொந்த நிகழ்ச்சி நிரலை அமைத்துக்கொள்ள முழு சுதந்திரம் உள்ளது.
வாக்குத் திருட்டு மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவற்றை தங்களின் முக்கியப் பிரச்சினையாக காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. அதை மாற்ற வேண்டும் என்று சொல்ல நாங்கள் யார்?’’ என தெரிவித்துள்ளார்.
வாக்குத் திருட்டுக்கு எதிராக சுமார் ஆறு கோடி கையெழுத்துக்களைப் பெற்றுள்ளதாகவும், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் சமர்ப்பிக்கப் போவதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.