ராகுல், பிரியங்கா நேற்று இண்டியா கேட் பகுதியில் அங்கிதா பண்டாரியின் பெற்றோரை சந்தித்தபோது...

 

படம்: ராகுல் காந்தி ட்விட்டர் பக்கம்

இந்தியா

“நீதிக்கான குரலை நசுக்க முடியாது; போராட்டத்தை நிறுத்த முடியாது” - அங்கிதா பண்டாரி பெற்றோருக்கு ராகுல் ஆதரவு

அனலி

டெல்லி: “நீதிக்கான குரலை நசுக்க முடியாது; போராட்டத்தை நிறுத்த முடியாது” என அங்கிதா பண்டாரியின் பெற்றோருக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

இளம் பெண் அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் தொடர்புடைய துஷ்யந்த் கவுதம் சிக்கிம் ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அங்கிதா பண்டாரியின் பெற்றோரை போலீஸார் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிர்ந்த சமூகவலைதளப் பதிவில் இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

கொலையும் பின்னணியும்:

உத்தராகண்ட் மாநிலத்தின் பாஜக மூத்த தலைவராக இருந்தவர் வினோத் ஆர்யா. இவர் அம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஆவார். இவரது மகன் புல்கிட் ஆர்யாவுக்கு ரிஷிகேஷ் அருகே சொகுசு விடுதி ஒன்று இருந்தது. 

அதில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தவர் அங்கிதா பண்டாரி. அவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி காணாமல் போனார். வழக்கம்போல் பணிக்குச் சென்ற மகள் வீடு திரும்பவில்லை என்று அங்கிதாவின் தந்தை, அங்கிதா பணியாற்றிய விடுதி உரிமையாளர் புல்கிட் ஆர்யா ஆகியோர் போலீஸில் புகார் கொடுத்தனர்.

போலீஸாரின் விசாரணையில் அங்கிதாவை, புல்கிட் ஆர்யாதான் கொலை செய்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து புல்கிட் ஆர்யா, விடுதி ஊழியர்கள் இருவர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அங்கிதாவின் உடலையும் போலீஸார் மீட்டனர். அம்மாநில முதல்வரின் உத்தரவின் பெயரில் சொகுசு விடுதியின் சில பகுதிகள் இடிக்கப்பட்டன. புல்கித் ஆர்யா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சர்ச்சையான விவிஐபி தொடர்பு:

இந்தக் கொலையில் ஆரம்பத்தில் இருந்தே பாஜகவின் முன்னாள் தேசியப் பொதுச் செயலாளரான துஷ்யந்த் குமார் கவுதமுக்கு தொடர்பு இருப்பதாக அங்கிதாவின் குடும்பத்தினரும் சமூக செயற்பாட்டாளர்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்தச் சூழலில் கடந்த அக்டோபர் 12 அன்று துஷ்யந்த் குமார் கவுதம் சிக்கிம் ஆளுநராகஅறிவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து டெல்லி இண்டியா கேட் பகுதியில் அங்கிதா பண்டாரியின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நேற்றிரவு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் சந்தித்தனர்.

இந்நிலையில், அங்கிதா பண்டாரியின் பெற்றோர் அதிகாலையில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.

அவர்கள் கைதைக் கண்டித்து ராகுல் காந்தி தந்து எக்ஸ் பக்கத்தில், “அதிகாலை 4 மணிக்கு அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அங்கிதா பண்டாரியின் பெற்றோர் காவலில் எடுக்கப்பட்டனர். அவர்களின் குற்றம்? இந்தியா கேட் பகுதியில் அமைதியாக அமர்ந்து, சிபிஐ விசாரணை முடியும்வரை துஷ்யந்த் கவுதம் சிக்கிம் ஆளுநராகக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடியது!

நேற்று பிரியங்காவும், நானும் அங்கிதாவின் பெற்றோரை சந்தித்தோம். விசாரணை முடியும் முன்னரே கவுதம் ஆளுநராக நியமிக்கப்படுவதில் ஏன் இந்த அவசரம் என்ற கேள்வி மட்டும்தான் அவர்களிடம் இருந்தது. ஆனால் கேள்வி கேட்கும் பாதிக்கப்பட்டவர்களின் குரலை மவுனிக்கச் செய்வது இந்த ஆட்சியின் பாணி அல்லவா.

இருப்பினும் நீதிக்கான குரலை மவுனமாக்க முடியாது, நீதிக்கான போராட்டமும் ஓயாது. காங்கிரஸ் கட்சி, அங்கிதா பண்டாரியின் குடும்பத்தினருடன் நிற்கிறது. அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை நிற்கும்.” எனப் பதிவிட்டுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT